September 21, 2026

புதுச்சேரியில் 42 நாட்களுக்கு பிறகு அமைச்சரவை விரிவாக்கம்: 3 அமைச்சர்கள் பதவியேற்பு

புதுச்சேரி அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டு 3 புதிய அமைச்சர்கள் பழைய ராஜ்நிவாஸில் பதவியேற்றனர். விரைவில் அமைச்சர்களுக்கு இலாக்காக்கள் ஒதுக்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி 18 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்திருக்கிறது.

இதையடுத்து கடந்த மாதம் 13-ம் தேதி முதல்வராக ரங்கசாமி, அமைச்சர்களாக பாஜகவைச் சேர்ந்த நமச்சிவாயம், என்ஆர்.காங்கிரஸை சேர்ந்த மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் பதவியேற்றனர். இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 18-ம் தேதி தற்காலிக பேரவைத் தலைவராக அன்பழகன் பதவியேற்றார். 20-ம் தேதி அனைத்து எம்எல்ஏக்களும் சட்டப்பேரவையில் பதவியேற்று கொண்டனர். இதன்பின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாமல் இருந்து வந்தது.

கடந்த 3-ம் தேதி பாஜகவைச் சேர்ந்த ஜி.என்.எஸ்.ராஜசேகர், என்.ஆர்.காங்கிரஸை சேர்ந்த சிவக்கொழுந்து, ராஜவேலு ஆகியோரை அமைச்சர்களாக பரிந்துரை செய்து அதற்கான கோப்பை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனிடம் முதல்வர் ரங்கசாமி வழங்கினார். இந்த கோப்பு மத்திய உள்துறை மூலம் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. கடந்த 8-ம் தேதி குடியரசுத் தலைவர் இதற்கு ஒப்புதல் அளித்தார்.

இதையடுத்து பாரதி பூங்கா அருகே உள்ள பழைய துணைநிலை ஆளுநர் மாளிகையில்  இன்று (ஜூன் 17) காலை 3 அமைச்சர்களின் பதவியேற்பு விழா  நடந்தது. தேர்தல் முடிவுகள் வெளியாகி 42 நாட்களுக்கு பிறகு இந்த அமைச்சரவை விரிவாக்கம் நடந்துள்ளது.

துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

தொடர்ந்து சட்டப்பேரவை வந்து அமைச்சர்கள் தங்கள் அறைகளில் பொறுப்பேற்றனர். முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.

ஏற்கெனவே பதவியேற்ற 2 அமைச்சர்களுக்கு இதுவரை இலாகா ஒதுக்கப்படவில்லை. அனைத்து இலாகாக்களையும் முதல்வர் கவனித்து வருகிறார்.

பதவியேற்பு நிகழ்வைத் தொடர்ந்து அமைச்சர்கள் சட்டப்பேரவைக்கு வந்தனர். அவர்களை இருக்கையில் அமர வைத்தபின்பு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், “புதுச்சேரியில் அமைச்சரவை விரிவாக்கம் நடந்தது. அனைத்து அமைச்சர்களும் பொறுப்பேற்று செயல்படவுள்ளனர். நல்ல முறையில் இந்த அமைச்சரவை முழுமையாக செயல்பட்டு மக்களின் நலன் வளர்ச்சிக்கு பாடுபடுவோம். விரைவில் அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்படும். பேரவைத்தலைவர் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும். பேரவைத்தலைவர் பதவி பாஜகவுக்கு தரப்படுமா என்பது அதைக் கொடுக்கும்போது தெரியும்,” என்றார்

Spread the love