March 24, 2026

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல்: திமுக போட்டியிடும் 13 தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் திமுக போட்டியிடும் 13 தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தற்போதுள்ள 6 எம்எல்ஏ-க்களுக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கூட்டணியில் ஒரு தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் இண்டியா கூட்டணியில் காங்கிரஸ் – திமுக இடையே தொடக்கம் முதலே கருத்து வேறுபாடு நிலவிவந்தது. கூட்டணிக்கு யார் தலைமை என்பதிலும், கூடுதல் தொகுதி பெறுவதிலும் இரு கட்சிகளுக்கும் இடையே பரஸ்பர மோதல் ஏற்பட்டது. மேலும் கூட்டணி, தொகுதி பங்கீடு செய்வதிலும் குழப்பம் நீடித்தது. இதனால் இருகட்சிகளுமே தனித்து போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 30 தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் – திமுக இருகட்சியை சேர்ந்த வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதனிடையே நீண்ட குழப்பங்களுக்கு பிறகு இண்டியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு வேட்புமனு தாக்கல் இறுதி நாளான நேற்று முடிவடைந்தது. இதில் காங்கிரஸூக்கு 16 இடங்களும், திமுகவுக்கு 14 இடங்களும் ஒதுக்கப்பட்டன.

மேலும் திமுக தரப்பில் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திமுக போட்டியிடும் 13 தொகுதிகளின் வேட்பாளர்களை திமுக ஒருங்கிணைப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி, புதுச்சேரி மாநில அமைப்பாளர் சிவா ஆகியோர் இன்று வெளியிட்டனர்.

அதன்விவரம்: * வில்லியனூர் – திமுக மாநில அமைப்பாளர் சிவா எம்எல்ஏ, மங்கலம்-எஸ்.எஸ். ரங்கன், திருபுவனை-அங்காளன்(சுயேட்சை எம்எல்ஏ), பாகூர் – எம்எல்ஏ செந்தில்குமார், முதலியார்பேட்டை – எம்எல்ஏ சம்பத், உப்பளம்-எம்எல்ஏ அனிபால்கென்னடி, உருளையன்பேட்டை – கோபால், நெல்லித்தோப்பு – கார்த்திகேயன், ராஜ்பவன்-விக்னேஷ் கண்ணன் (முன்னாள் அமைச்சர் ப. கண்ணன் மகன்), காலாப்பட்டு – செந்தில்(எ)ரமேஷ், கதிர்காமம் – வடிவேலு, காரைக்கால் தெற்கு – எம்எல்ஏ நாஜிம், நிரவி டி.ஆர்.பட்டினம் – எம்எல்ஏ நாகதியாகராஜன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதில் தற்போதுள்ள 6 எம்எல்ஏக்களுக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் திமுகவில் இணைந்த சுயேட்சை எம்எல்ஏ அங்காளனுக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. கூட்டணியில் திமுக தரப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு உழவர்கரை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் மங்களம் தொகுதியில் முதல்வர் ரங்கசாமியை எதிர்த்து எஸ்.எஸ்.ரங்கன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love