பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ வழித்தடத்தில் நாளை இறுதி ஆய்வு…

பூந்தமல்லி – வடபழனி இடையே மெட்ரோ ரயில் சேவை இயக்குவதற்கு நாளை இறுதி ஆய்வு நடத்தப்படவுள்ளது.
சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ திட்டத்தில் மெரீனா கடற்கரை கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி சுற்றுச்சாலை வரையிலான வழித்தடம் 26 கி.மீ. தொலைவுக்கு அமையவுள்ளது.
ஏற்கெனவே முதல்கட்ட மெட்ரோ திட்டத்தில் வடபழனி இணைக்கப்பட்ட நிலையில், 2-ஆம் கட்டத்தில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான 3-ஆவது வழித்தடமானது வடபழனி மெட்ரோவைக் கடந்து பூந்தமல்லி செல்லும் வகையில் ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
அதில், வடபழனி முதல் பூந்தமல்லி வரையிலான 16 கி.மீ. தொலைவுக்கான மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டுவிட்டது. ரயில் என்ஜின் சோதனையும் நடத்தப்பட்டு ரயில் பாதை வடிவமைப்புக்கான உறுதிச் சான்றும் பெறப்பட்டது.
இதனிடையே, தண்டவாளத்தின் பாதுகாப்பு உறுதித்தன்மை சோதனை செய்யப்பட்டு இந்திய ரயில்வே வாரியமும் ஒப்புதல் வழங்கி பயன்பாட்டுக்கு தயாராகவுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாகவே, பிரதமர் நரேந்திர மோடியும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் இணைந்து பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ சேவையை மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ரயில் தண்டவாளத்தின் தரம், பயணிகள் பாதுகாப்பு, பெட்டிகளின் வசதிகள் உள்ளிட்டவை குறித்து நாளைமுதல் 3 நாள்களுக்கு இறுதிகட்ட ஆய்வை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம். செளத்ரி நடத்தவுள்ளார்.

More Stories
வேலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் 3 நாள் மிதமான பனிமூட்டம் நிலவ வாய்ப்பு
மதுரை மாநகராட்சி பட்ஜெட் முக்கிய அம்சங்கள்: மீனாட்சியம்மன் கோயில் சுற்றுப்புற மேம்பாட்டுக்கு ரூ.450 கோடி!
பல குடும்பங்களின் தலையெழுத்தை திமுக அரசு மாற்றியுள்ளது: முதல்வர் ஸ்டாலின்