May 12, 2026

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தட்டுப்பாடு இல்லை: பீதியடைய வேண்டாம் என மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: மேற்கு ஆசிய போர் காரண​மாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் கச்சா எண்​ணெய் விலை உயர்ந்து வரு​கிறது. இது அந்​நியச் செலா​வணி​யில் தாக்​கத்தை ஏற்​படுத்தி வரும் நிலையில், பெட்​ரோல், டீசல் பயன்​பாட்டை குறைக்க வேண்​டும் என பிரதமர் நரேந்​திர மோடி நேற்று முன்​தினம் நாட்டு மக்களுக்கு வேண்​டு​கோள் விடுத்​தார்.

இந்​நிலை​யில், பல்​வேறு அமைச்​சகங்​களுக்கு இடையி​லான ஆலோ​சனைக் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. இதில் மேற்கு ஆசியா​வின் நிலைமை குறித்து விவா​திக்​கப்​பட்​டது. இந்​தக் கூட்டத்​தில் பெட்​ரோலி​யம் மற்​றும் இயற்கை எரி​வாயு அமைச்சகத்​தின் இணைச் செய​லா​ளர் பேசி​ய​தாவது: இந்தியாவிடம் கச்சா எண்​ணெய், சமையல் எரி​வாயு (எல்​பிஜி), பெட்​ரோல் மற்​றும் டீசல் போது​மான அளவு கையிருப்பு உள்​ளது. இதில் தட்​டுப்​பாடு எது​வும் இல்​லை. இந்​தி​யா​வின் எரிசக்தி இறக்​கும​தி​யில் சுமார் 90 % பாதிக்​கப்​பட்ட பிராந்​தி​யத்​திலிருந்து வருகிறது.

ஆனால் எந்​தவொரு பாதிப்​பை​யும் குறைக்​கும் வகை​யில் அரசு விரை​வாக நடவடிக்கை எடுத்​துள்​ளது. நாட்​டில் அனைத்து வகையான எரிபொருள் விநி​யோக​மும் போது​மான அளவில் இருப்​ப​தால், மக்​கள் பீதி​யடைந்து வாங்க வேண்​டிய அவசி​யம் இல்​லை.

பிரதமரின் சமீபத்​திய வேண்​டு​கோள், எரிசக்தி பாது​காப்பு மற்றும் உலகளா​விய நிச்​சயமற்ற காலங்​களில் நாட்​டின் மீதான பொருளா​தா​ரச் சுமை​யைக் குறைப்​ப​தற்​கான ஒரு முயற்சியாகவே பார்க்​கப்பட வேண்​டும். இவ்​வாறு அவர்​ தெரிவித்தார்​.

பிரதமர் மோடியின் 10 வேண்டுகோள்: ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.

அப்போது அவர் முன்வைத்த 10 முக்கிய வேண்டுகோள்: பெட்ரோல் மற்றும் டீசல் நுகர்வைக் குறைக்க வேண்டும், தனியார் வாகனங்கள் தேவைப்பட்டால் ‘கார் பூலிங்’ முறையைப் பயன்படுத்த வேண்டும், சரக்கு போக்குவரத்துக்கு ரயில்களை பயன்படுத்த வேண்டும், மெட்ரோ சேவைகளைப் பயன்படுத்த வேண்டும், முடிந்தவரை மின்சார வாகனங்களை பயன்படுத்த வேண்டும், கரோனா காலத்தைப் போல வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டும்.

காணொலி கூட்டங்களை நடத்த வேண்டும், தேவையற்ற வெளிநாட்டு பயணங்கள், வெளிநாட்டில் திருமண நிகழ்ச்சி நடத்துவதை தவிர்க்க வேண்டும், உள்நாட்டு சுற்றாலாவுக்கு முக்கியத்துவம் தர வேண்டும், தேவையின்றி தங்கம் வாங்குவதை தள்ளிப் போட வேண்டும், தினமும் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் உட்பட இந்தியாவில் தயாரான பொருட்களை பயன்படுத்த வேண்டும், சமையல் எண்ணெய் மற்றும் ரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.” என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.

Spread the love