
திமுக அரசை மகளிருக்கான அரசாக முதல்வர் ஸ்டாலின் நடத்தி வருகிறார் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி சார்பில் துறைமுகம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட, 57-வது, வால்டாக்ஸ் சாலை, வ.உ.சி. சாலையில், மாநகராட்சி நிதி, துறைமுகம் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் மத்திய சென்னை எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.13.56 கோடியில் குளிர்சாதனம் மற்றும் பல்வேறு நவீன வசதிகளுடன் பிரமாண்டமாக முதல்வர் திருமண மாளிகை கட்டப்பட்டுள்ளது.
இதை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, இப்புதிய முதல்வர் திருமண மாளிகையில் 10 இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, சீர்வரிசைப் பொருட்களை வழங்கி மணமக்களை துணை முதல்வர் வாழ்த்தினார். பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
முந்தைய 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் இந்த வடசென்னை பகுதி எப்படி இருந்தது, இந்த 5 ஆண்டு கால திமுக அரசில் எந்த அளவுக்கு வடசென்னை முன்னேறியிருக்கிறது என்று நான் உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை.
வட சென்னையை வளர்ந்த சென்னையாக மாற்ற சுமார் ரூ.8,000 கோடியில் ‘வடசென்னை வளர்ச்சித் திட்டத்தை’ முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன் ஒரு பகுதியாகத்தான் இதுபோன்ற பொதுமக்களுக்குப் பயன்படும் திருமண மண்டபங்களைக் கட்டித் திறந்து வைத்திருக்கிறோம். இதைத் தொடர்ந்து வடசென்னையில் பேருந்து நிறுத்தங்கள், படிப்பகங்கள் என்று ஏராளமான கட்டமைப்புகளை முதல்வர் கொடுத்திருக்கிறார்.
Read More
திமுக அரசு அமைந்ததில் இருந்து முதல்வர் ஸ்டாலின் மகளிருக்கான அரசாக நடத்தி வருகிறார். அவரது முதல் கையெழுத்து மகளிர் விடியல் பயணம் திட்டத்துக்குதான். பள்ளி குழந்தைகளுக்கு சமையல் செய்து கொடுத்தும் அனுப்பும் மகளிரின் சுமையை போக்க காலை உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இன்று ஒவ்வொரு நாளும் 22 லட்சம் குழந்தைகள் பயனடைகின்றன.
அரசுப் பள்ளியில் படித்து உயர் கல்வி செல்லும் மாணவிகளுக்கு, புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 கல்வி ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போன்று கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மூலம், ஒவ்வொரு மாதமும் 1.30 கோடி மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. இந்தத் திட்டங்கள் எல்லாம் தொடர வேண்டும். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சி அமைக்கப் போவது உறுதி. இந்த திராவிட மாடல் அரசு தொடர நீங்கள் அனைவரும் நம்முடைய அரசுக்கும், கழகத் தலைவருக்கும் ஆதரவாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

More Stories
அனுமதி பெறாத கொடிக் கம்பங்கள் அகற்றக் கோரிய வழக்கு: 13 மாவட்ட ஆட்சியர்கள் பதிலளிக்க உத்தரவு
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவில் பக்ரீத், ரம்ஜான் நாட்களில் மட்டும் தொழுகைக்கு அனுமதி: உச்ச நீதிமன்றம்
தூய்மைப் பணியாளர்களுக்கு முதல்வரின் உணவுத் திட்டம் விரிவாக்கம்: ஸ்டாலின் தொடங்கி வைத்தார்