மதுரையில் இன்று இரவு அதிமுக – பாஜக இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பான முக்கியமான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி அமைப்புகள் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளது.
மதுரைக்கு வரும் பியூஷ் கோயல்
மத்திய அமைச்சரான பியூஷ் கோயல் மதுரைக்கு வர உள்ளதாகவும், அவருடன் அதிமுகவின் முக்கிய நிர்வாகி எஸ்.பி. வேலுமணியும் இணைந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இரு கட்சிகளுக்கிடையிலான தொகுதி பங்கீடு குறித்து ஆரம்ப கட்ட ஆலோசனைகள் ஏற்கனவே நடைபெற்று உள்ளதாகவும், இன்று நடைபெறும் சந்திப்பில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை
திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் கடந்த சில நாட்களாக தொடர் ஆலோசனைகளை நடத்தி வருகிறது. காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை முன்னேறி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில், திமுக தனது கூட்டணி அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பாகவே அதிமுக – பாஜக கூட்டணி தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்து அறிவிக்கத் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இரு முக்கிய அணிகளும் தங்களது கூட்டணி அமைப்புகளை விரைவாக உறுதி செய்ய முயற்சி மேற்கொண்டு வருகின்றன. மதுரையில் நடைபெறவுள்ள இந்த பேச்சுவார்த்தை தமிழக அரசியலில் அடுத்த கட்ட நகர்வை தீர்மானிக்கக்கூடிய முக்கிய சந்திப்பாக பார்க்கப்படுகிறது.

More Stories
மதுரை வடக்கு தொகுதியில் திமுக – அதிமுக போட்டி!
தஞ்சையில் மார்ச் 4-ல் தவெக தலைவர் விஜய் பிரசாரம்!
திமுக – கம்யூனிஸ்ட் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை – அதிக சீட்டுகளை கேட்டு கோரிக்கை!