February 10, 2026

மதுரை மாநகராட்சி பட்ஜெட் முக்கிய அம்சங்கள்: மீனாட்சியம்மன் கோயில் சுற்றுப்புற மேம்பாட்டுக்கு ரூ.450 கோடி!

ரூ.1459.31 கோடியில் பட்ஜெட் தாக்கல்

மதுரை மாநகராட்சி பட்ஜெட் முக்கிய அம்சங்கள்: மீனாட்சியம்மன் கோயில் சுற்றுப்புற மேம்பாட்டுக்கு ரூ.450 கோடி!

படங்கள்:  எஸ்.கிருஷ்ணமூர்த்தி. 

மதுரை: மதுரை மாநகராட்சியில் ரூ.1459.31 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மீனாட்சியம்மன் கோயில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை மேம்படுத்த ரூ.450 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றுவது முதலான பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

மதுரை மாநகராட்சி 2026-2027-ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டமும், மாநகராட்சியின் 45-வது மாமன்ற கூட்டமும் பொறுப்பு மேயர் நாகராஜன் நாகராஜன் தலைமையில் நடந்தது. மாநகராட்சி ஆணையாளர் சித்ரா முன்னலை வகித்தார். இந்தக் கூட்டத்தில், மேயர் இல்லாததால் துணை மேயர் நாகராஜன், பொறுப்பு மேயராக 2026-2027-ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவரங்கள் அடங்கிய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மாகநராட்சி ஆணையாளர் சித்ரா, கணக்குக் குழு தலைவர் நூர்ஜஹான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இந்த நிதியாண்டு வருவாயில் ரூ.867.74 கோடி சொந்த வருவாயாகவும், ரூ.499.15 கோடி அரசின் பல்வேறு திட்டங்களினால் கிடைக்கும் மானியமாகவும், ரூ.83.55 கோடி திட்டங்களுக்கான கடனாகவும் மொத்த வருமானமாக மாநகராட்சிக்கு ரூ.1,450.44 கோடி கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிதியாண்டில் செலவினங்களில் ரூ.348.87 கோடி பணியாளர் செலவினமாகவும், ரூ.37.15 கோடி நிர்வாக செலவினமாகவும், ரூ.325.68 கோடி இயக்கம் மற்றும் பராமரிப்பு செலவினமாகவும், ரூ.26.61 கோடி வங்கி வட்டி செலவினமாகவும், ரூ.5.54 கோடி திட்ட செலவினமாகவும், ரூ.40.18 கோடி பொதுநிதி உள்ளாட்சி நிதிப்பங்கு தொகையாகவும், ரூ.49.33 கோடி குடிநீர் மற்றும் வடிகால் நிதி உள்ளாட்சி நிதிப் பங்கு தொகையாகவும், ரூ.553.27 கோடி மூலதன செலவினமாகவும், ரூ.70.67 கோடி கடன் திரும்ப செலுத்துதல் செலவினமாகவும் என மொத்தம் ரூ.1459.31 கோடி செலவினமாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக 2026-2027-ஆம் நிதி ஆண்டு பட்ஜெட் ரூ.8 கோடியே 87 லட்சத்து 56 ஆயிரம் பற்றாக்குறை பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள்:

* மதுரை மீனாட்சியம்மன் கோயில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் போடப்பட்ட பாதள சாக்கடை திட்டம் மிக பழமையானது. அதனால், ஏற்படும் சிரமங்களை தவிர்க்க இந்த பாதாள சாக்கடையை சீரமைத்து புதிதாக அமைக்க ரூ.450 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயார் செய்து நிர்வாக அனுமதி பெறப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.

* 100 வார்டுகளிலும் உள்ள மழைநீர் வடிகால்களை மறுசீரைமப்பு செய்து புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் திட்டம் 5 பகுதியாக முன்மொழிவு தயார் செய்து நிர்வாக அனுமதி பெற்று பணிகள் இந்த நிதியாண்டிலே தொடங்கப்படும்.

* 1-வது மண்டலம் அன்சாரி நகர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாநகராட்சி வரலாற்றிலே முதல் முறையாக டயாலிஸ் யூனிட் வரும் 2026-2027-ம் நிதியாண்டு முதல் தொடங்கப்பட உள்ளது.

* தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து ‘Hospital on Wheels’ என்ற புதிய திட்டத்தின் மூலம் இணைக்கப்பட்ட வார்டு புறநகர் பகுதியில் வசிக்கும் பின்தங்கிய மக்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கே நேரடியாக சென்று சிறப்பு மருத்துவ சிகிச்சை வழங்கும் திட்டம் தொடங்கப்படும்.

* மாநகராட்சி இளங்கோ பள்ளியில் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் வெர்ச்சுவல் லேப் அமைத்து செயல்படுகிறது. இதுபோல், மண்டலத்திற்கு ஒன்று என்று மற்ற மாநகராட்சி பள்ளிகளிலும் மெய் நிகர் ஆய்வகம் (வெர்ச்சுவல் லேப்) அமைக்கப்படும்.

* மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் விருப்பமுள்ள 91 மாணவர்களுக்கு, வெள்ளி வீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து மாணவர்களுக்கு வாரந்தோறும் சனிக்கிழமை ஜெர்மன் மொழி பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.

* ஸ்மார்ட் மதுரை செயலி மூலம் பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்களை அவர்கள் புகார் தெரிவிக்கும் இடத்துடன் கூடிய புகைப்படத்துடன் புகார்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

* CITIIS 2.0 திட்டத்தின் கீழ் மதுரை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணிகளின் கீழ் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம், வீட்டு வசதி மற்றும் நகர்புற வசதி அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து ரூ.314 கோடியில் நிறைவேற்றப்பட உள்ளது.

* மதுரை மாநகரை தூய்மையாகவும், அழகுப்படுத்தவும் பிரதான சாலைகளின் பொது சுவர்களில் சமூக விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது.

* மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தனியார் பள்ளிகளை போல் அடையாள அட்டை வழங்கப்படும்.

* ரூ.116.81 கோடியில் 1072 மிகவும் சேதமடைந்த சாலைகள் மேம்படுத்தும் பணிகள் நடக்கிறது.

* சுயச்சான்றின் அடிப்படையில் குடியிருப்புக் கட்டிடங்களுக்கு கட்டிட அனுமதி பெறும் திட்டத்தில் 3,326 விண்ணப்பங்கள் மூலம் கட்டிட வரைப்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநகராட்சிக்கு இதுவரை இல்லாத வகையில் ரூ.39 கோடியே 38 லட்சத்து 54 ஆயிரத்து 437 வருவாய் பெறப்பட்டுள்ளது.

* சாலையோர வியாபாரிகளை மேம்படுத்தும் வகையில் ரூ.1.18 கோடி மதிப்பீட்டில் தள்ளுவண்டிகள் நடப்பு நிதி ஆண்டில் வழங்கப்பட உள்ளது.

* மாநகராட்சியில் வேறு எங்கும் இல்லாத வகையில் இரவு நேர தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டு நகரின் தூய்மை பராமரிக்கப்படுகிறது.

* மாநகராட்சி அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் வாசிக்கும் திறனை ஊக்குவிக்கும் வகையில் தினசரி நாளிதழ்கள் வாங்கி தினமும் வாசிப்பு பயிற்சி வழங்கப்படுகிறது.

* மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு சிஎஸ்ஐ பல் மருத்துவமனை, அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து 15,000 மாணவர்களுக்கு இலவச பல், கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு அவர்கள் கண், பல் நலன் பாதுகாக்கப்பட்டுள்ளது.

மதுரை மாநகரின் அடிப்படை வசதிகள் மற்றும் பொதுச் சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெளிநடப்பு செய்த அதிமுக:

கூட்டம் தொடங்கியதும், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா தலைமையில் அக்கட்சி கவுன்சிலர்கள், பெரியார் கூட்டுக் குடிநீர் திட்டத்தை அவசரம் அவசரமாக முடித்ததை கண்டித்து கோஷமிட்டப்படி வெளிநடப்பு செய்தனர்.

பல மாதங்களுக்கு பிறகு மாநகராட்சி நடக்கிறது. அந்தக் கூட்டத்தில் பொறுப்பான எதிர்க்கட்சியாக அதிமுக கவுன்சிலர்கள் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்வதிலே குறியாக இருந்தனர். அவர்களை திமுக கவுன்சிலர்கள் சிரித்துக் கொண்டே வழியனுப்பி வைத்தனர்.

தர்ணா போராட்டம்:

86-வது வார்டு பாஜக கவுன்சிலர் பூமாஸ்ரீ, நாய்கள் கால்நடைகளை கடிப்பதற்கு புகார் செய்தும் மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், அது சம்பந்தமாக மறைத்து எடுத்து வந்த பேனரை கூட்டத்தில் தூக்கி காட்டியப்படி மன்ற கூட்டரங்கில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக கவுன்சிலர்கள் அந்த பேனரை பிடுங்கி கழித்து எறிந்தனர். அவைக் காவலர்கள் அவரை அப்புறப்படுத்தியதால் சிறிது நேரம் பரபரப்பு நீடித்தது.

Spread the love