மதுரை: மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே சாலையின் தடுப்புச் சுவரில் கார் மோதியதில் கோயிலுக்குச் சென்று திரும்பிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மதுரை அண்ணா நகரைச் சேர்ந்தவர் பிரகாஷ் (76). இவரது உறவினர்கள் சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த வெங்கடேஷ் ( 60), இவரது தாய் வசந்தா (90), மனைவி ஆஷா ( 58), மாமியார் சுலோச்சனா ( 72) ஆகியோர் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு நேற்று அதிகாலை மதுரையில் இருந்து ஒரே காரில் புறப்பட்டுச் சென்றனர்.
காரை வெங்கடேஷ் ஓட்டினார். சுவாமி தரிசனம் முடித்து விட்டு மதுரைக்குப் புறப்பட்டனர். நேற்று மாலை 5 மணிக்கு மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே அணுகுசாலை- நான்கு வழிச்சாலை சந்திப்பில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் மோதியது.
இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் பயணித்த பிரகாஷ், வெங்கடேஷ் உள்ளிட்ட 5 பேரும் அவர்களது இருக்கையில் அமர்ந்தபடி அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவல் அறிந்த கொட்டாம்பட்டி போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று காருக்குள் சிக்கிய உடல்களை மீட்டு மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் விபத்து நடந்த இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் மதுரையில் சோகத்தை ஏற்படுத்தியது.

More Stories
06-07-2026
06-07-2026
06-07-2026