February 13, 2026

“மத சுதந்திரத்தின் மீதான தாக்குதல்” – வந்தே மாதரம் குறித்த உள்துறை முடிவுக்கு முஸ்லிம் அமைப்பு கண்டனம்

“மத சுதந்திரத்தின் மீதான தாக்குதல்” - வந்தே மாதரம் குறித்த உள்துறை முடிவுக்கு முஸ்லிம் அமைப்பு  கண்டனம்

புது டெல்லி: அரசு மற்றும் பள்ளி நிகழ்வுகளில் தேசிய கீதத்திற்கு முன் வந்தே மாதரத்தின் 6 சரணங்களையும் கட்டாயம் பாட வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை ஜமியத் உலேமா-இ-ஹிந்த் தலைவர் மவுலானா அர்ஷத் மதானி விமர்சித்தார். இது “மத சுதந்திரத்தின் மீதான அப்பட்டமான தாக்குதல்” கண்டித்துள்ளார்.

அரசு மற்​றும் பள்ளி நிகழ்ச்​சிகளில் தேசிய கீதம் இசைக்​கப்​படுவதற்கு முன்னதாக தேசி​யப் பாடலான வந்தே மாதரம் கட்டாயம் இசைக்க வேண்​டும். அப்​போது அனை​வரும் எழுந்து நின்று மரி​யாதை செலுத்த வேண்​டும் என்று மத்​திய அரசு உத்​தர​விட்​டுள்​ளது. மேலும், புதிய விதி​களின்​படி 1937-ல் நீக்​கப்​பட்ட வந்தே மாதரம் பாடலின் வரி​கள் சேர்க்​கப்​பட்​டுள்​ளன. தாய் நாட்டை லட்​சுமி, சரஸ்​வ​தி, துர்கை​யுடன் ஒப்​பிடும் வரி​களும் இனி இசைக்​கப்​படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டது.

இது குறித்து ஜமியத் உலேமா-இ-ஹிந்த் தலைவர் மவுலானா அர்ஷத் மதானி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “வந்தே மாதரம் பாடலை தேசியப் பாடலாகவும், அதன் அனைத்து சரணங்களையும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும், பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கட்டாயமாக்கவும் மத்திய அரசு எடுத்த ஒருதலைப்பட்சமான கட்டாய முடிவு, இந்திய அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட மத சுதந்திரத்தின் மீதான அப்பட்டமான தாக்குதல் மட்டுமல்ல, சிறுபான்மையினரின் அரசியலமைப்பு உரிமைகளைக் குறைக்கும் ஒரு திட்டமிட்ட முயற்சியாகும்.

முஸ்லிம்கள் யாரும் ‘வந்தே மாதரம்’ பாடுவதையோ அல்லது இசைப்பதையோ தடுப்பதில்லை. இருப்பினும், பாடலின் சில வசனங்கள் தாயகத்தை ஒரு தெய்வமாக சித்தரிக்கும் நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. இது ஓரிறை மதங்களின் அடிப்படை நம்பிக்கைக்கு முரணானது. ஒரு முஸ்லிம் அல்லாவை மட்டுமே வணங்குவதால், இந்தப் பாடலைப் பாடும்படி அவரை கட்டாயப்படுத்துவது அரசியலமைப்பின் 25-வது பிரிவு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் பல தீர்ப்புகளை தெளிவாக மீறுவதாகும்.

இந்தப் பாடலை கட்டாயமாக்கி மக்கள் மீது திணிக்க முயற்சிப்பது தேசபக்தியின் வெளிப்பாடு அல்ல. மாறாக, இது தேர்தல் அரசியல், ஒரு மதவாத நிகழ்ச்சி நிரல் மற்றும் அடிப்படை பிரச்சினைகளிலிருந்து பொதுமக்களின் கவனத்தைத் திசைதிருப்ப வேண்டுமென்றே மேற்கொள்ளப்படும் முயற்சியை பிரதிபலிக்கிறது.

ஒருவரின் நாட்டின் மீதான உண்மையான அன்பின் அளவுகோல் கோஷங்களில் அல்ல, மாறாக குணத்திலும், தியாகத்திலும் உள்ளது. இதன் எடுத்துக்காட்டுகளை முஸ்லிம்கள் மற்றும் ஜமியத் உலமா-இ-ஹிந்தின் வரலாற்றுப் போராட்டத்தில் முக்கியமாகக் காணலாம். இத்தகைய முடிவுகள் நாட்டின் அமைதி, ஒற்றுமை மற்றும் ஜனநாயக விழுமியங்களை பலவீனப்படுத்துகின்றன. மேலும் அரசியலமைப்பின் உணர்வைக் குறைமதிப்புக்கு உட்படுத்துகின்றன.

முஸ்லிம்கள் ஒரே கடவுளை மட்டுமே வணங்குகிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே, ‘வந்தே மாதரம்’ பாடலை முழுமையாகப் பாடக் கட்டாயமாக்குவது அரசியலமைப்பு, மத சுதந்திரம் மற்றும் ஜனநாயகக் கொள்கைகள் மீதான தெளிவான தாக்குதலாகும்” எனத் தெரிவித்தார்.

Spread the love