சென்னை: “மின்வாரியத்தை காப்பாற்ற வேண்டுமென்றால் முதலில் K2 ஒப்பந்த முறையை முடிவுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக மின்வாரியத்தின் மின் கம்பங்களில் உயிரைப் பணயம் வைத்து ஏறுவது ஒப்பந்தத் தொழிலாளர்கள். ஆனால், அவர்களின் உழைப்பின் பலனை அனுபவிப்பது இடைத்தரகர்கள். இதுதான் இன்று தமிழக மின்வாரியத்தில் நீடித்து வரும் K 2 ஒப்பந்த முறை என்ற பெயரில் நடைபெறும் மிகப்பெரிய கொள்ளை.
பத்தாண்டுகளுக்கும் மேலாக 20,000-க்கும் அதிகமான ஒப்பந்தத் தொழிலாளர்கள் மின்வாரியத்தின் நிரந்தரப் பணிகளை செய்து வருகின்றனர். மின் விநியோகம் தடைபடாமல் இருக்க இரவும் பகலும் உழைக்கும் இவர்களுக்கு, இன்னும் நிரந்தர அங்கீகாரம் இல்லை. நேரடி ஊதியமும் இல்லை. ஆனால், உழைக்காத ஒப்பந்ததாரர்களுக்கு மட்டும் கோடிக் கணக்கில் லாபம் கொட்டிக் கொண்டே இருக்கிறது. இதுதான் சமூக நீதியா ?
1994-ம் ஆண்டு முதல் தமிழக மின்வாரியத்தை பெரும் கடன் சுமைக்குள் தள்ளிய அமைப்புகளில் முக்கியமானது இந்த K2 ஒப்பந்த முறை என்ற குற்றச்சாட்டை தமிழக அரசு மறைக்க முடியாது. மின்வாரியத்தின் பணம் தொழிலாளர்களிடம் செல்ல வேண்டுமா ? இடைத்தரகர்களின் கைகளில் குவிய வேண்டுமா ? என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய நேரம் இது.
K2 ஒப்பந்த முறையை உடனடியாக ஒழித்தால், இடைத்தரகர் கொள்ளை நிறுத்தப்படும். மின்வாரியத்தின் தேவையற்ற செலவுகள் குறையும். அதன் பயனாக மின்வாரியத்தின் நிதி நிலை வலுப்பெறும். எதிர்காலத்தில் பொதுமக்கள் மீது சுமத்தப்படும் மின் கட்டண உயர்வையும் கட்டுப்படுத்த வழி உருவாகும். இதைச் செய்ய அரசுக்கு மனம் இல்லையா ? அல்லது இடைத்தரகர்களின் நலனே முக்கியமா ?
தமிழக மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மின்வாரியமே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும். தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் K2 ஒப்பந்த முறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் அனைவரையும் Temporary Casual Labour (TCL) ஆக உடனடியாக அறிவிக்க வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணிப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார உரிமையை, சட்ட ரீதியாக உறுதி செய்ய வேண்டும்.
உழைப்பவரின் வியர்வையில் இடைத்தரகர்கள் கொள்ளையடிக்கும் நிலை தொடரக்கூடாது. தொழிலாளர்களின் கைகளை வலுப்படுத்தாமல் மின்வாரியத்தை வலுப்படுத்த முடியாது. மின்வாரியத்தை காப்பாற்ற வேண்டுமென்றால் முதலில் K2 ஒப்பந்தக் கொள்ளையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். தமிழக அரசு இனியும் மவுனம் காக்காமல், தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.” என்று வேல்முருகன் கூறியுள்ளார்.

More Stories
“தமிழக முதல்வர் விஜய் இப்போதைக்கு கர்நாடகாவுக்கு வர வேண்டாம்” – டிகே.சிவகுமார் வேண்டுகோள்
மன்னார் வளைகுடா கடற்பகுதியில் கடல் சீற்றம்: பாம்பன் – குருசடை தீவு படகு சவாரி நிறுத்தம்
செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம் – டாஸ்மாக் முறைகேடு வழக்கில் உத்தரவு