புனே: மகாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையிலிருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புனே நகருக்கு அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலையில் பயணிக்க வேண்டுமானால் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும்.
இந்நிலையில் மும்பை – புனே நெடுஞ்சாலையில் ராய்காட் மாவட்டம் ஆதோஷி சுரங்கப்பாதை அருகே நேற்று முன்தினம் ஒரு காஸ் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரியில் புரோப்பிலீன் என்ற காஸ் அடைக்கப்பட்டு இருந்தது. இதனால் காஸ் கசியும் அபாயம் இருந்ததால் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இதையடுத்து அந்த லாரியின் பின்னால் வந்த வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நின்றன. சாலையில் இருந்த காஸ் டேங்கர் லாரியை அப்புறப்படுத்த நெடுஞ்சாலை ஊழியர்களும், தீயணைப்புப் படை வீரர்களும் பெரும் முயற்சி செய்தனர். ஆனால் அதை அகற்றுவதற்கு சிரமம் நீடித்தது. இந்த விபத்து மாலை 4.45 மணிக்கு ஏற்பட்டது.
மாலை 5 மணி முதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணி வகுத்து நின்றன. விபத்து நடந்த இடம் வனப்பகுதியாகும். நள்ளிரவு வரை இந்த நிலை நீடித்தது. இதையடுத்து போக்குவரத்து போலீஸார், எதிரே வரும் வழியில் வாகனங்களை ஒருபக்கமாக செல்ல அனுமதித்தனர். இருந்தபோதும் போக்குவரத்து நெரிசல் குறையவில்லை.
இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாயினர். தாங்கள் அளித்த சுங்கக் கட்டணத்தை தங்களுக்குத் திருப்பித் தர வேண்டும் என்று அவர்கள் சுங்கச்சாவடி அதிகாரிகளிடம் கோஷமிட்டனர். அப்பகுதியில் போதுமான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதியும் இல்லாததால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

More Stories
பிரதமர் மோடி இன்று மலேசியா பயணம்!
“வளர்ந்த இந்தியா இலக்கை அடைய அறிவியல்-தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்த வேண்டும்” – ஐஐடி இயக்குநர் காமகோடி வலியுறுத்தல்
மத்திய கைலாஷ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ‘எல்’ வடிவ பாலம் பிப்.16-ல் திறப்பு