புது டெல்லி: மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றத்தின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து விவாதிக்க, நாளை (மார்ச் 25) மாலை 5 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
உலகளாவிய மற்றும் பிராந்திய அளவில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் தற்காப்புத் தயார் நிலையை ஆய்வு செய்வதற்காக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் முப்படைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான், விமானப் படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் அமர் ப்ரீத் சிங், ஜெனரல் உபேந்திர திவேதி, கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி, டிஆர்டிஓ அமைப்பின் தலைவர் சமீர் காமத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் மோதல் நான்காவது வாரமாக நீடிக்கிறது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால், எரிபொருள் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, “மேற்கு ஆசியாவின் தற்போதைய நிலைமை மிகுந்த கவலையளிக்கிறது. 3 வாரங்களுக்கும் மேலாக பிரச்சினை நீடிக்கிறது. இதனால் சர்வதேச பொருளாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. தற்போதைய போரால் நமது நாட்டில் பல்வேறு சவால்கள் எழுந்துள்ளன.
போரின் எதிர்விளைவாக உலகின் மிக முக்கிய கடல்வழி போக்குவரத்து (ஹார்முஸ் ஜலசந்தி) முடங்கியிருக்கிறது. இதனால் கச்சா எண்ணெய், எரிவாயு போக்குவரத்து மோசமாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. வளைகுடா நாடுகளில் சுமார் ஒரு கோடி இந்தியர்கள் வசிக்கின்றனர். அவர்களின் பாதுகாப்பில் மத்திய அரசு மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறது. பல்வேறு நாடுகளின் சரக்கு கப்பல்களில் இந்தியர்கள் பெரும்பான்மையாக பணியாற்றி வருகின்றனர்.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியாவுக்கு கச்சா எண்ணெய், எரிவாயு, உரங்கள் கொண்டுவரும் சரக்கு கப்பல் போக்குவரத்து முடங்கியிருக்கிறது.
இப்போதைய இக்கட்டான காலத்திலும் பெட்ரோல், டீசல், காஸ் விநியோகம் சீராக நடைபெற்று வருகிறது. இந்தியாவின் சமையல் காஸ் தேவையில் 60 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. உள்நாட்டில் சமையல் காஸ் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், சமையல் காஸ், உரம் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.
கச்சா எண்ணெய், எல்என்ஜி, எல்பிஜி ஆகியவை முன்பு 27 நாடுகளில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது 41 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. நமது நாட்டில் 53 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது. இதனை 65 மெட்ரிக் டன்னாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று பேசியிருந்தார்.
இந்தப் பின்னணியில், அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருப்பது கவனிக்கத்தக்கது.
முன்னதாக, பிப்ரவரி 28 அன்று, அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திய ராணுவத் தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார்.
இதற்குப் பதிலடியாக, ஈரான் வளைகுடா நாடுகளின் பல பகுதிகளில் உள்ள இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தளங்களை தாக்கி வருகிறது. இதனால் கடல் மற்றும் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், எரிபொருள் போக்குவரத்து சிக்கலை சந்தித்துள்ளது கவனிக்கத்தக்கது.

More Stories
‘ஏஐ’யால் வழக்கறிஞராக முடியாது: உச்ச நீதிமன்ற நீதிபதி கருத்து
5 ஆண்டில் பொருளாதாரம் ரூ.40 லட்சம் கோடியாகும்: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நம்பிக்கை
யமஹா மியூசிக் இந்தியா நிறுவனத்தின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு