March 3, 2026

மே.இ.தீவுகள் அணி வீரர்கள் நாடு திரும்புவதில் சிக்கல்! மத்திய கிழக்கில் பதற்றம் எதிரொலி!!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ப் பதற்றம் எதிரொலியாக மேற்கிந்தியத் தீவுகள் அணியினர் தாயகம் திரும்புவதில் சிக்கல் உருவாகியுள்ளதைப் பற்றி…

News image

மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்கள்.– படம்: ஏபி.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ப் பதற்றம் எதிரொலியாக மேற்கிந்தியத் தீவுகள் அணியினர் தாயகம் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. தென்னாப்பிரிக்கா – நியூசிலாந்து மோதும் முதலாவது அரையிறுதிப் போட்டி கொல்கத்தாவிலும், இந்தியா – இங்கிலாந்து மோதும் இரண்டாவது அரையிறுதிப் போட்டி மும்பையில் நடைபெறவிருக்கிறது.

அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கு முன்னதாக, கொல்கத்தாவில் நடைபெற்ற வாழ்வா? சாவா? ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி நிர்ணயித்த 196 ரன்கள் இலக்கை எட்டி இந்திய அணி புதிய சாதனையைப் படைத்தது. 2012, 2016 ஆம் ஆண்டுகளில் சாம்பியனான மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்திய வீரர் சஞ்சு சாம்சானின் அதிரடி ஆட்டத்தால் சூப்பர்-8 சுற்றுடன் வெளியேறியது.

இந்த நிலையில், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் போர்த் தொடுத்துள்ள வேளையில், மத்திய கிழக்கு மற்றும் மேற்காசிய நாடுகளில் கடும் போர்ப் பதற்றமான சூழல் உருவாகியிருக்கிறது. இதனால், அங்கு மிகவும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றத்தால், அங்கு வான்வெளிப் பரப்புகள் மூடப்பட்டுள்ளன.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, வளைகுடா நாடுகளின் வான்வெளிகள் தற்காலிகமாக மூடப்பட்டு விமான சேவைகள் முடங்கின.Advertise with us

தற்போது சில விமான நிலையங்கள் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ள போதிலும், துபை பன்னாட்டு விமான நிலையத்தில் விமான சேவை இன்னும் முழுமையாகச் சீரடையவில்லை.

இதன் காரணமாக, இன்று சென்னையில் இருந்து துபைக்குப் புறப்பட்ட எமிரேட்ஸ் உள்ளிட்ட சில விமானங்கள், அங்கு தரையிறங்க அனுமதி கிடைக்காததால் நடுவானில் இருந்து மீண்டும் சென்னைக்கே திரும்பின. துபையில் ஓடுதளம் மற்றும் வான்வெளி கட்டுப்பாடுகள் இன்னும் முழுமையாகத் தளர்த்தப்படாததால், நூற்றுக்கணக்கான பயணிகள் சென்னை விமான நிலையத்தில் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இதற்கு மத்தியில், இந்தியாவில் இருந்து தாயகம் திரும்பவிருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகள், சொந்த நாடு திரும்புவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால், அவர்களின் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.Advertise with us

இதனைத் தொடர்ந்து மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரர்கள் மற்றும் நிர்வாகத்தினர் இந்தியாவில் பத்திரமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Spread the love