சென்னை: தனது தந்தை அமைச்சர் காந்திக்காக, ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் முடிவிலிருந்து திமுக வேட்பாளர் வினோத் காந்தி பின்வாங்கியுள்ளார். ராணிப்பேட்டையில் மீண்டும் காந்தியே போட்டியிடுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அமைச்சர்கள் காந்தி, மனோ தங்கராஜ், கயல்விழி ஆகிய மூவருக்கும் திமுகவில் சீட் மறுக்கப்பட்டது. ஆனால், காந்தியின் மகன் வினோத் காந்தி ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.
தனக்கு சீட் அறிவிக்கப்படாததால், காந்தி அதிருப்தியில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, தனது தந்தைக்காக வினோத் காந்தி ராணிப்பேட்டையில் போட்டியிடுவதில் இருந்து பின்வாங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் முகநூலில் வெளியிட்ட பதிவில் , “2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் அரிய வாய்ப்பை எனக்கு அளித்து, என் மீது நம்பிக்கை வைத்து தேர்ந்தெடுத்த தலைவருக்கும், சகோதரர் உதயநிதி ஸ்டாலினுக்கும் எனது இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆனால், என் தந்தையார் மீண்டும் போட்டியிடும் உறுதியான விருப்பத்தைக் கருத்தில் கொண்டு, இந்த வாய்ப்பை அவருக்கு மரியாதையுடன் மீண்டும் ஒப்படைக்க முடிவு செய்துள்ளேன்.
என்னை உறுதியாக ஆதரித்து, நம்பிக்கை அளித்த அனைத்து ஆதரவாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இன்னும் நீண்ட வாழ்க்கை முன் உள்ளது என்பதில் உற்சாகத்துடன், சேவை செய்து சாதிக்க நான் உறுதியுடன் இருக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார். ஆனால், இதுகுறித்து திமுக தலைமையில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

More Stories
புதுக்கோட்டை
அஜித் ரசிகர்களிடம் எஸ்.பி. வேலுமணி தீவிர வாக்கு சேகரிப்பு.. விஜய்க்கு எதிராக அதிமுக வகுக்கும் வியூகம்
சட்டமன்ற தேர்தல் 2026: புதுச்சேரி மக்களின் நலனே இலக்கு: தமிழக வெற்றிக் கழகத்தின் புரட்சிகர வாக்குறுதிகள்!