சென்னை: திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு ‘வள்ளலார் நெடுஞ்சாலை’ என பெயர் சூட்டப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வள்ளலார் தினத்தையொட்டி நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: வள்ளலார் பிறந்தநாள் தனிப்பெரும் கருணை நாள்; ஓராண்டு தொடர் கொண்டாட்டமாக வள்ளலார் முப்பெரும் விழா; வள்ளலார் வாழ்ந்த மருதூர் இல்லம் புனரமைப்பு என வள்ளலாரின் புகழைப் போற்றுவதன் தொடர்ச்சியாக, அயல் நாட்டினரிடமும் வள்ளலாரின் உயரிய கருத்துகளை கொண்டு சேர்க்க, வரும் பிப்ரவரி 15-ம் தேதி சென்னை கீழ்ப்பாக்கம் ஏகாம்பரநாதர் பள்ளி வளாகத்தில் ‘அனைத்துலக வள்ளலார் மாநாடு 2026’ நடத்தப்படும்.
மேலும், வள்ளலார் நெறியாளர்களின் கோரிக்கையை ஏற்று, திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு ‘வள்ளலார் நெடுஞ்சாலை’ என பெயர் சூட்டப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன்: அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சமூகவலைதளப் பதிவில், “இறைவன் ஒளி வடிவமானவர் என்பதை மக்களிடம் கொண்டு சேர்க்க சத்திய ஞான சபையை நிறுவிய வரும், ஏழை, எளிய மக்களின் பசிப்பிணியை போக்குவதே ஆகச்சிறந்த இறைப்பணி என்பதில் உறுதியாக இருந்தவருமான அருட்பெருஞ்ஜோதி வள்ளலார், ஜோதி வடிவான தினம் இன்று (நேற்று).
தன்னை நாடி வந்த அன்பர்களுக்கு ஆண்டவரை அடையும் அருளியலை வழங்குவதோடு, தேனினும் இனிய திருவருட்பாக்களின் மூலம் மனிதகுலம் நீடூழி வாழ்வதற்கான ஒழுக்க நெறிமுறைகளையும் போதித்த வள்ளலாரை எந்நாளும் நினைவில் வைத்து போற்றுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

More Stories
நீலகிரியில் ரூ.2.59 கோடி பணம், தங்கம் பறிமுதல்.. சுற்றுலா செல்பவர்கள் கவனமுடன் செயல்பட எச்சரிக்கை!
போத்தனூர் – கரூர் புதிய ரயில் பாதை: சேலம் கோட்டத்திற்கு பயணிகள் சங்கம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!
திருமங்கலம் மற்றும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தேர்தல் பொது பார்வையாளர் அவர்கள் வாக்குப்பதிவு மையத்தில் ஆய்வு செய்த புகைப்படம்