புதுடெல்லி: ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) வங்கியில் ரூ. 2,929 கோடி கடன் மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், பிரபல தொழிலதிபர் அனில் அம்பானியிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை மேற்கொண்டனர்.
ரிலையன்ஸ் கம்யூனி கேஷன்ஸ் நிறுவனம் மற்றும் அதன் தலைவர் அனில் அம்பானிக்கு எதிராக எஸ்பிஐ அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்திற்கு வியாழக்கிழமை காலை வந்த அவரிடம் அதிகாரிகள் வங்கிக் கடன் மோசடி குறித்து விரிவான விசாரணை மேற்கொண்டனர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அனில் அம்பானி மற்றும் அவரது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. வங்கியில் பெற்ற கடன் தொகையை முறைகேடாகப் பயன்படுத்தியது, நிதி மற்றும் கணக்குகளில் முறைகேடு செய்தது உள்ளிட்ட புகார்கள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
எஸ்பிஐ வங்கியின் புகாரின்படி, 2018-ம் ஆண்டு புள்ளிவிவரங்களின் அடிப்படையில் அந்த நிறுவனத்திற்குப் பல்வேறு வங்கிகள் மூலம் ரூ.40,000 கோடிக்கு மேல் கடன் நிலுவை உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் பொதுத்துறை நிறுவனமான எஸ்பிஐ வங்கிக்கு மட்டும் ரூ.2,929.05 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
அனில் அம்பானி தரப்பு விளக்கம் அனில் அம்பானி தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுக்கிறார். சட்டப்படி இதனை அவர் எதிர்கொள்வார் என்று அனில் அம்பானியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

More Stories
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, உச்சத்தில் கச்சா எண்ணெய் விலை, படுத்தது பங்குச் சந்தை!
அதிரடியாக குறையும் தங்கம் விலை: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2,160 சரிந்தது!
தொடர் சரிவில் தங்கம், வெள்ளி விலை: இன்றைய சந்தை நிலவரம்!