புதன் கிரகமும், சுக்கிரனும் இணையும் போது லட்சுமி நாராயண யோகம் உருவாகிறது. வரக்கூடிய 22ஆம் தேதி சுக்கிர பகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்குப் பெயர்ச்சியாக உள்ளார். மேலும் அங்கு இருக்கக்கூடிய புதனுடன் இணைந்து பயணிக்க உள்ளார். இந்த அற்புத காலத்தில் சில ராசிகளின் வாழ்க்கையில் பெரிய அளவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குறிப்பாக நிதி சார்ந்த விஷயங்களில் முன்னேற்றமும், செயல்பாடுகளில் புத்திசாலித்தனமும் அதிகரிக்கும்.
லட்சுமி நாராயண யோகத்தின் தாக்கம்
லட்சுமி தேவியின் அம்சமாக சுக்கிரனையும், நாராயணனின் அம்சமாக புதன் பகவானையும் குறிப்பிடுகின்றனர். நவம்பர் 22ஆம் தேதி கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு சுக்கிரன் பெயர்ச்சியாகக்கூடிய நிலையில், இந்த இரண்டு கிரகங்களும் இணைந்து லட்சுமி நாராயண யோக பலனை அருள உள்ளன. அதிலும் குறிப்பாக சுக்கிரனின் சொந்த ராசியான துலாம் ராசியில் சந்திக்க உள்ளதால் கூடுதல் விசேஷமாக அமைகிறது. இந்த யோகத்தின் தாக்கம் எந்தெந்த ராசிகளுக்கு அற்புதமாக அமையும் எனத் தெரிந்து கொள்வோம்.
ரிஷப ராசி
ரிஷப ராசி அன்பர்களுக்கு உங்கள் ராசிநாதன் சுக்கிரனின் பெயர்ச்சி மற்றும் புதனுடன் இணைவதால் ஏற்படும் ‘லட்சுமி நாராயண ராஜயோகம்’ நிதி விவகாரங்களில் நல்ல முன்னேற்றத்தைத் தரக்கூடியதாக அமையும். உங்கள் வேலை, தொழிலில் வருமானம் அதிகரிக்கும். நீங்கள் எந்தச் செயல்களில் ஈடுபட்டாலும் சாதக பலன்களைப் பெறுவீர்கள். உங்களுடைய கடின உழைப்பிற்கான அங்கீகாரமும், செயல்பாடுகள் மூலம் முன்னேற்றத்தையும் பெற்றிட முடியும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த நல்ல வாய்ப்புகள் அமையும். தொழில் தொடங்குவதில் முன்னேற்றம் காண்பீர்கள். உங்களுடைய எதிரிகளின் தொல்லைகள் குறையும்.
மிதுன ராசி
மிதுன ராசி நண்பர்களுக்கு ராசிநாதன் புதனுடன் சுக்கிரன் இணைவதால் பல விதத்தில் சாதக பலன்களைக் காண்பீர்கள். லட்சுமி நாராயண ராஜயோகம் உங்களுடைய தன்னம்பிக்கையையும், வேலை தொடர்பான உத்வேகத்தையும் அதிகரிக்கக்கூடியதாக அமையும். நீண்ட காலமாக நிலுவையில் இருக்கக்கூடிய பணிகளை நிறைவேற்ற முடியும்.
உங்கள் முயற்சிக்கான கூடுதல் பலன் கிடைக்கப் பெறுவீர்கள். உங்கள் பிள்ளைகளின் மூலம் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். சிலருக்குப் பூர்வீகச் சொத்துக்கள், நிதி நன்மைகள் பெற வாய்ப்புகள் உண்டு. வெளியூர், வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்குச் சாதக வாய்ப்புகள் உண்டு. புதிய தொழில், வியாபார முயற்சியில் இருப்பவர்களுக்குத் திட்டங்கள் எதிர்பார்த்த முன்னேற்றத்தைத் தரும்.
கடக ராசி
கடக ராசி அன்பர்களுக்குப் புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் உருவாகும் லட்சுமி நாராயண யோகம் உங்களுடைய தொழில் மற்றும் நிதி சார்ந்த விஷயங்களில் புதிய வாய்ப்புகளையும், முன்னேற்றத்தையும் தரக்கூடியதாக அமையும். வீட்டின் சூழ்நிலை சாதகமாக மாறும். சிலருக்கு வண்டி, வாகனம், சொத்து தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.
வேலை தொடர்பாக உங்களுக்குச் சாதகமான சூழ்நிலை ஏற்படும். புதிய பொறுப்புகள் உங்களுக்குக் கிடைக்க வாய்ப்பு உண்டு. உங்கள் திறமை மிளிரும். வேலை, தொழில் தொடர்பான புதிய திட்டங்களைத் தொடங்கச் சாதகமான சூழ்நிலை ஏற்படும். நிதி நிர்வாகங்களில் முன்னேற்றம் ஏற்படும். உங்களுக்கு இனிமையும் சுகமும் கிடைக்கக்கூடிய காலம்.
துலாம் ராசி
துலாம் ராசி அன்பர்களுக்கு உங்களுடைய ராசியில் சஞ்சரிக்கப் போகும் சுக்கிரன் மற்றும் புதன் சேர்க்கையால் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம் சிறப்புப் பலன்களைத் தரக்கூடும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ஆட்சி பெற்று அமர்வதால் செயல்பாடுகளில் நேர்மறையான நற்பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் மனதில் தன்னம்பிக்கையும், ஆளுமைத் திறனும் மேம்படும்.
உங்களுடைய திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மேலதிகாரிகளின் பாராட்டு உங்கள் இலக்கை வேகமாக அடைய உதவும். சிலருக்குச் சம்பள உயர்வு கிடைக்கலாம். தொழில் செய்யக்கூடியவர்களுக்குப் புதிய வாடிக்கையாளர்கள் மற்றும் தொடர்புகள் மூலம் லாபகரமான ஒப்பந்தங்கள் கிடைக்கலாம்.
மகர ராசி
மகர ராசியைச் சேர்ந்தவர்களுக்குக் கர்ம ஸ்தானத்தில் ஏற்படும் லட்சுமி நாராயண ராஜயோகம் உங்களுடைய தொழில் முன்னேற்றத்தை அடைய உதவும். நீங்கள் செய்து வரக்கூடிய வேலை மற்றும் தொழில் தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்ததை விட அதிக பலன்கள் கிடைக்கும். சூழ்நிலை சாதகமானதாக மாறும். வேலை தொடர்பாகக் கடின உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களுடைய செயல்திறனை அங்கீகரிப்பார்கள். சிலருக்குப் புதிய பொறுப்புகள் அல்லது பதவி உயர்வு கிடைக்கலாம்.
சரியான திட்டமிடல் மற்றும் புதிய உத்திகளைக் கையாள்வதன் மூலம், நீங்கள் செய்யும் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமும், அதை விரிவுபடுத்த நல்ல வாய்ப்புகளும் உருவாகும்.
கும்ப ராசி
கும்ப ராசியைச் சேர்ந்தவர்களுக்குப் பாக்கிய ஸ்தானத்தில் ஏற்படக்கூடிய லட்சுமி நாராயண ராஜயோகம், திருமண வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான சூழ்நிலையை ஏற்படுத்தும். உங்கள் தந்தை அல்லது பெரியவர்களின் அன்பு, ஆசிர்வாதத்தால் உங்கள் செயல்பாடுகளில் முன்னேற்றமும் பெரிய உயரத்தையும் அடைய முடியும்.
பல விதத்தில் சாதக பலன்கள் ஏற்படும். குறிப்பாக நீங்கள் எதிர்பாராத சிலரின் உதவிகள், ஆலோசனைகள் கிடைக்கப் பெறுவீர்கள். நிதி சார்ந்த விஷயங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பெறுவீர்கள். எதிர்பாராத இடங்களில் இருந்து நிதி ஆதாயம் கிடைக்கலாம். செல்வநிலை அதிகரிக்கும். உங்களுடைய வேலை, குடும்பம் தொடர்பாக இருக்கக்கூடிய கவலை நீங்கி மன அமைதி கிடைக்கும்.

More Stories
திருப்பரங்குன்றத்தில் சிறிய வைரத் தேரோட்டம்!
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலம்: இன்று மாலை மகா தீபம்
ஏழரைச் சனியிலும் செல்வ யோகம்: பலன் தரும் அமைப்புகள் ?