சென்னை: லாட்டரி அதிபர் மார்ட்டின் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான சுமார் ரூ.457 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இதுதொடர்பாக அமலாக்கத்துறை ஆறு வார காலத்தில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2009 – 2010 காலகட்டத்தில் சட்ட விதிகளுக்கு புறம்பாக சிக்கிம் மாநில லாட்டரியை விற்பனை செய்ததன் மூலம், சிக்கிம் மாநில அரசுக்கு ரூ. 910 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக லாட்டரி அதிபர் மார்ட்டின் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
கேரள நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கின் அடிப்படையில், அமலாக்கத் துறையும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து மார்ட்டின், அவரது மனைவியும் அதிமுக எம்எல்ஏ-வுமான லீமா ரோஸ், இவர்களது மகளும், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் மனைவியுமான டெய்ஸி ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட பலரது வீடுகளில் சோதனை நடத்தியது.
பின்னர் அமலாக்கத் துறை மார்ட்டின் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான ரூ.910.29 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கியது.
இதில் ரூ.456.84 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கியதை உறுதி செய்து சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச்சட்ட வழக்குகளுக்கான அமலாக்கத் துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் கடந்தாண்டு மே மாதம் உத்தரவிட்டது.
தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்து மார்ட்டின் மற்றும் தனியார் நிறுவனங்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
அதில், தங்களது சொத்து முடக்கத்தை ரத்து செய்து, அந்த சொத்துகளை விடுவிக்க உத்தரவிட வேண்டும், எனக் கோரியிருந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுதொடர்பாக அமலாக்கத் துறை ஆறு வார காலத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

More Stories
பேரறிவாளன் சட்டப்படி வழக்கறிஞராக பதிவு செய்ததில் என்ன தவறு? – நீதிபதிகள் கேள்வி
‘மலர்ச்சி’ கட்சி மக்கள் பிரதிநிதிகள் இருவருக்காக மாற்றுத் திட்டம் | உள்குத்து உளவாளி
7 மாற்றுத்திறனாளிகள் உட்பட டாஸ்மாக் பணியாளர்கள் 200 பேருக்கு பதவி உயர்வு