July 28, 2026

வளைகுடா நாடுகளில் பணிபுரிவோரில் வாரத்திற்கு 3 இந்திய தொழிலாளர்கள் மரணம்: வெளியுறவுத் துறை அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி: வளைகுடா நாடுகளில் வாரத்திற்கு சராசரியாக 3 இந்திய தொழிலாளர்கள் பணிபுரியும் இடங்களில் நடக்கும் விபத்துகளில் உயிரிழப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வெளிநாடு வாழ் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்த ஒன்றிய வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் மாநிலங்களவையில் அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில், ‘கடந்த 2023ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வெளிநாடுகளில் பணிபுரிந்த 800க்கும் மேற்பட்ட இந்தியர்கள், அவர்கள் பணிபுரியும் இடங்களில் நடந்த விபத்துகளில் உயிரிழந்துள்ளனர்.

இதில் 55 சதவீதம் மரணங்கள் வளைகுடா நாடுகளிலேயே நடந்துள்ளன. குறிப்பாக சவுதி அரேபியாவில் 182 தொழிலாளர்களும், ஐக்கிய அரபு அமீரகத்தில் 128 தொழிலாளர்களும் உயிரிழந்துள்ளனர். கடந்த மாதம் கத்தாரில் நடந்த வெடிவிபத்தில் 12 இந்தியர்கள் பலியாகினர். வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பிற்கு அரசு முன்னுரிமை அளிக்கிறது. பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு முகமைகள் மூலமாகவே ‘இ-மைக்கிரேட்’ போர்ட்டலில் பணி நியமனம் செய்யப்படுகிறது’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேற்கண்ட புள்ளி விபரங்களின்படி வளைகுடா நாடுகளில் வாரத்திற்கு சராசரியாக 3 இந்திய தொழிலாளர்கள் அவர்கள் பணிபுரியும் இடங்களில் நடக்கும் விபத்துகளில் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களைச் சரியாகப் பயன்படுத்தாதது, அதிகப்படியான வெப்பநிலை மாறுபாடுகள், 12 மணி நேர வேலைப் பளு மற்றும் மாதக் கணக்கில் சம்பளம் வழங்கப்படாதது போன்ற பல்வேறு காரணங்களால் தொழிலாளர்களின் உயிரிழப்புகள் மற்றும் தற்கொலைகள் அதிகரித்து வருவதாக தெலங்கானா வெளிநாடுவாழ் இந்தியர் நல அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

Spread the love