April 9, 2026

விஜய் பிரசாரத்தில் விபத்து: தவெகவினர் 11 பேர் மீது வழக்கு

நெல்லை,ஏப். 9–

தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரத்தின்போது ஏற்பட்ட விபத்துகள் தொடர்பாக 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வருகிற 23 ஆம் தேதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தேர்தலையொட்டி, தவெக தலைவர் விஜய்யும் தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் நேற்று விஜய் தலைமையில் தவெக பிரசாரம் நடைபெற்றது.

இந்த நிலையில், விஜய் பங்கேற்ற நெல்லை, தூத்துக்குடி பிரசாரத்தின் போது சிறு விபத்துகளும் ஏற்பட்டன. நெல்லை மாவட்டம், வாகைகுளம் பகுதியில் விஜய்யின் வாகனத்தை தவெக தொண்டர்கள் பின்தொடர்ந்து சென்றபோது, முந்திச் செல்ல முயன்ற மோட்டார் சைக்கிள் கீழே விழுந்ததில், பின்வந்த வாகனங்களும் மோதியதில் 7 பேர் காயமடைந்தனர். தொடர்ந்து, பிரசாரம் நடைபெற்ற பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், சாலையைக் கடக்க முயன்ற ஒருவர் மீது அரசுப் பேருந்து மோதியதில், பலத்த காயமடைந்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், விஜய்யின் வாகனத்தை பின்தொடர்ந்து செல்ல முயன்ற வாகனங்களால் ஏற்பட்ட விபத்தில் மொத்தம் 16 பேர் காயமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, விபத்துகள் தொடர்பாக, கட்சி நிர்வாகிகள் 11 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Spread the love