திருவனந்தபுரம்: அமெரிக்கா, ஈரான் இடையிலான போர் காரணமாக வளைகுடா நாடுகளில் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்தியாவுக்கான விமான டிக்கெட் மிகக் கடுமையாக உயர்ந்திருக்கிறது. பொதுவாக ஐக்கிய அரசு அமீரக தலைநகர் அபுதாபி மற்றும் துபாய் உள்ளிட்ட நகரங்களில் இருந்து இந்திய நகரங்களுக்கு வருவதற்கு ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை விமான கட்டணம் வசூல் செய்யப்பட்டது.
போர் காரணமாக தற்போது விமான கட்டணம் ஒரு லட்சம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை உயர்ந்திருக்கிறது. மிகவும் இக்கட்டான நேரங்களில் ரூ.2.5 லட்சம் வரைகூட விமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
எனினும் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் மலையாளிகள், கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க விமான டிக்கெட்டுக்கு ரூ.2 லட்சம் வரை செலவு செய்து சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். இதுதொடர்பாக முனீர் என்பவர் கூறும்போது, “கடந்த 19 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வருகிறேன். ஒவ்வொரு தேர்தலின்போதும் கேரளாவுக்கு சென்று வாக்களிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன். தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தலுக்காக கேரளா செல்ல ரூ.2.3 லட்சத்துக்கு டிக்கெட் வாங்கி உள்ளேன். எவ்வளவு செலவானாலும் வாக்குரிமையை செலுத்துவதை கடமையாக கருதுகிறேன்” என்று தெரிவித்தார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அஜ்மான் நகரில் வசிக்கும் ஆஷா என்பவர் கூறும்போது, “கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டு உள்ளேன். இதற்காக ஒரு லட்சம் ரூபாய்க்கு விமான டிக்கெட் வாங்கி உள்ளேன். எனது தங்கை நிம்மியும் இதே தொகைக்கு விமான டிக்கெட் முன்பதிவு செய்திருக்கிறார்” என்றார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் சுமார் 10 லட்சம் மலையாளிகள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் விமான டிக்கெட்டுக்கு ரூ.2 லட்சம் வரை செலவு செய்து கேரளாவுக்கு திரும்பி வருகின்றனர்.

More Stories
பிரிவினையின் போது உ.பி.யில் குடியேறிய 12,000+ குடும்பங்களுக்கு நிலம் – யோகி அரசு ஒப்புதல்
சைக்கிளில் 14 நாட்களில் எவரெஸ்ட் அடிவாரம் சென்ற முதல் இந்திய பெண்
கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு