February 24, 2026

ஹரியானா அரசு கணக்கில் ரூ.590 கோடி மோசடி – ஐடிஎப்சி வங்கி ஊழியர்களின் பணப் பரிமாற்றம் குறித்து ஆய்வு

ரிசர்வ் வங்கி தகவல்

ஹரியானா அரசு கணக்கில் ரூ.590 கோடி மோசடி - ஐடிஎப்சி வங்கி ஊழியர்களின் பணப் பரிமாற்றம் குறித்து ஆய்வு

மும்பை: ஹரியானா அரசின் வங்கி கணக்குகளில் இருந்து ரூ.590 கோடியை ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கி ஊழியர்கள் மோசடி செய்தது குறித்து தடயவியல் தணிக்கை குழு ஆய்வு செய்து வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ஹரியானா அரசு தனியார் நிதி நிறுவனத்துடன் இணைந்து ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கியில் சில கணக்குகளை வைத்துள்ளது. இந்நிலையில் ஹரியானா அரசு வங்கி கணக்குகளில் இருந்து ரூ.590 கோடி முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 18-ம் தேதி முதல் ஹரியானா அரசின் இதர நிறுவனங்களின் கணக்குகளிலும் இதுபோன்ற சிக்கல்கள் கவனிக்கப்பட்டன. இதையடுத்து ஐடிஎப்சி வங்கி நடத்திய முதல்கட்ட ஆய்வில், ஹரியானா வங்கி கிளை ஊழியர்கள் சிலருடன் கூட்டு சேர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.

இந்த மோசடி குறித்து வங்கி வாரியத்தின் சிறப்பு குழு மற்றும் தணிக்கை குழுவின் கவனத்துக்கு வங்கி நிர்வாகம் கொண்டு சென்றது. போலீசிலும் புகார் செய்யப்பட்டது. 4 பேர் பணியிடை நீக்கம் இதையடுத்து வங்கி அதிகாரிகள் 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது. இதர வங்கி கணக்குகளுக்கு மோசடியாக மாற்றப்பட்ட பணத்தை திருப்பி அனுப்பும் படியும் ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்நிலையில் இந்த மோசடி குறித்து ஆய்வு செய்ய ‘கேபிஎம்ஜி’ என்ற சர்வதேச நிறுவனத்தின் தடயவியல் தணிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த பணிகள் முடிய 4 முதல் 5 வாரங்கள் ஆகும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பணம் மீட்கப்படும் இந்த மோசடி குறித்த ஹரியானா சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட்டது.

அப்போது பதில் அளித்த மாநில முதல்வர் நயப் சிங் சைனி, ‘‘ தவறு செய்தவர்கள் வங்கி ஊழியராக இருந்தாலும், அரசு ஊழியராக இருந்தாலும் தப்ப முடியாது. கடும் நடவடிக்கை எடுத்து மக்கள் பணம் மீட்கப்படும்’’ என்றார்.

Spread the love