டெஹ்ரான்: ஈரான் – அமெரிக்க, இஸ்ரேல் போர் நடந்து வருவதால் ஹார்முஸ் ஜலசந்தியில் 2 ஆயிரம் கப்பல்கள் 20 ஆயிரம் மாலுமிகளுடன் தவித்து வருகின்றன. கப்பல்களின் கையிருப்பில் உள்ள உணவு, குடிநீர் குறைந்து வருவதால் அவர்களுக்கு இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ளது.
ஈரான் – அமெரிக்க, இஸ்ரேல் கூட்டுப் படைகளுக்கு இடையே கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் போர் நடந்து வருகிறது. இந்நிலையில் ஹார்முஸ் ஜலசந்தி வழியே செல்லும் கச்சா எண்ணெய் கப்பல்களை ஈரான் முடக்கியுள்ளது. இந்த ஜலசந்தியில் ஏராளமான கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஈரானின் அனுமதி பெறும் கப்பல்கள் மட்டுமே இந்த ஜலசந்தியைக் கடந்து வெளிநாடுகளுக்குச் செல்கின்றன.
இந்நிலையில் ஈரானின் முடக்கம் காரணமாக ஜலசந்தியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கப்பல்கள், 20 ஆயிரத்துக்கு மேலான மாலுமிகளுடன் தவித்து வருவதாகத் தெரியவந்துள்ளது. மேலும் கப்பல்களில் உள்ள உணவு, குடிநீர் போன்றவை குறைந்து வருவதால் அவர்கள் இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இதையடுத்து தங்களுக்கு உதவி கேட்டு அவர்கள் இ-மெயிலை தாங்கள் சார்ந்த நிறுவனங்களுக்கும், நாடுகளுக்கும் அனுப்பி வருகின்றனர். இ-மெயிலில் உதவி கப்பல்களில் உள்ள ஊழியர்களுக்கு உடனடியாக உணவு, குடிநீர், அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யுமாறு அந்த இ-மெயிலில் உதவி கோரப்பட்டுள்ளது.
இதை சர்வதேச போக்குவரத்து தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (ஐடிஎஃப்) கடற்பயணிகள் ஆதரவுக் குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐடிஎஃப்பின் நிர்வாகி முகமது அர்ராசேடி கூறும்போது, “இங்கு அசாதாரணமான சூழல் நிலவுகிறது. தங்களுக்கு தேவையான உணவு, குடிநீர் கிடைக்குமா என கப்பல் மாலுமிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் அவர்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. அவர்களுக்குத் தேவையான உதவியை ஈரான் உள்ளிட்ட நாடுகள் வழங்க வேண்டும்’’ என்றார்.

More Stories
‘‘ஈரான் போர் முடிவை நெருங்குகிறது’’ – நாட்டு மக்களுக்கு ட்ரம்ப் உரை
நேட்டோ அமைப்பில் இருந்து வெளியேற அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பரிசீலனை
ஈரானிடம் இருந்து மீண்டும் கச்சா எண்ணெய் இறக்குமதி? – 6 லட்சம் பேரலுடன் குஜராத் வருகிறது கப்பல்