தவெக தலைவர் விஜய் உடன் காங்கிரஸ் தரவு பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்ரவர்த்தி பேசியது தொடர்பான சர்ச்சை இதுவரை ஓயவில்லை. தமிழகத்தில் 2026 தேர்தல் வாக்குப்பதிவு நெருங்கவுள்ள நிலையில், டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஒருபுறம் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பேச்சுவார்த்தையே தொடங்காத நிலையில், மறுபுறம் திமுக கூட்டணியில் காங்கிரஸின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் ஆட்சியில் பங்கு, கூடுதல் சீட் என அடுத்தடுத்து பேசி தலைவலியை ஏற்படுத்தினர். இதற்கிடையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை காங்கிரஸ் தரவு பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்ரவர்த்தி சந்தித்து பேசியது பெரிய சர்ச்சையானது. திமுக தலைமைக்கு தெரியாமல் அகில இந்திய காங்கிரஸ் தலைமை ரகசிய பேச்சுவார்த்தை நடத்துகிறதோ? என்று அரசியல் நோக்கர்கள் மத்தியில் விவாதப் பொருளாக மாறியது.
காங்கிரஸ் கூட்டணி சர்ச்சை – திமுக முற்றுப்புள்ளி
அது தனிப்பட்ட சந்திப்பு என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் முட்டுக் கொடுத்தனர். ஆனால் விஷயம் அத்துடன் நிற்கவில்லை. ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று பிரவீன் சக்ரவர்த்தியின் அடுத்தடுத்த பேச்சுகள் சீரியஸ் மூடிற்கு மாற்றின. பல வாரங்கள் இழுபறியான கூட்டணி சர்ச்சைக்கு 28 சீட் ஒதுக்கி, ஆட்சியில் பங்கிற்கு ”நோ” சொல்லி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்தார். இந்நிலையில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு பிரவீன் சக்ரவர்த்தி பிரத்யேக பேட்டியளித்திருக்கிறார். இது அடுத்த சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
திமுக கூட்டணியில் என்ன நடக்கிறது? ஏன் இப்படி பேசுகிறார்கள்?
அதாவது, விஜய் உடனான சந்திப்பு பற்றி பேசுகையில், தனிப்பட்ட முறையில் எதையுமே செய்யவில்லை. கடந்த 6 மாதங்களில் நான் செய்த அனைத்து விஷயங்களுக்கும் கட்சி மேலிடத்தின் ஒப்புதலும் இருந்தது. இதனால் ஏற்படும் பழியை நான் ஏற்றுக் கொள்கிறேன் எனவும் குறிப்பிட்டிருக்கிறார். தான் செய்வதெல்லாம் கட்சி நலனுக்கானது தான். விஜய்யை சந்திக்கும் போது என்னுடன் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவரும் இருந்ததாக சுட்டிக் காட்டியுள்ளார். எனவே விஜய் – பிரவீன் சக்ரவர்த்தி பின்னணியில் ராகுல் காந்தியின் ஒப்புதலும் இருப்பதை பார்க்க முடிகிறது.
தவெக பக்கம் சாயும் காங்கிரஸ்
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே இருந்தாலும், முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் சோனியா காந்தியை காட்டிலும் ராகுலுக்கே அதிகமிருக்கிறது. அப்படியெனில் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் தாங்கள் எதிர்பார்த்த கூடுதல் சீட், ஆட்சியில் பங்கு உள்ளிட்ட விஷயங்களை ஒரு கை பார்த்துவிடலாம். கிடைக்காத பட்சத்தில் தவெக பக்கம் சென்றுவிடலாம் என்று திட்டமிட்டுள்ளனர். டெல்லியில் கார்கே, ராகுல் காந்தி தலைமையில் தமிழக காங்கிரஸை சேர்ந்த நிர்வாகிகள் பலரும் நேரில் வரவழைக்கப்பட்டு கருத்து கேட்கப்பட்டது.
அதிலும் தவெக ஆப்ஷனை பலரும் வலியுறுத்தியுள்ளனர். இத்தகைய சர்ச்சையானது மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி இடையில் பனிப்போராக கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட ராகுல் காந்தி பலமுறை வந்த போதிலும், தமிழ்நாடு பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர்களை மட்டும் ஆதரித்து பரப்புரை செய்திருக்கிறார். எங்கேயும் ”Brother MK Stalin” என்ற வார்த்தையை உதிர்க்கவே இல்லை. இவரது சமூக வலைதளப் பக்கத்தில் தேடியவர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது.
2026 தேர்தலில் திமுக, காங்கிரஸ் தொண்டர்களின் பணி
இந்நிலையில் பல்வேறு சர்ச்சைகளை தொடர்ந்து திமுக – காங்கிரஸ் கூட்டணி இறுதி செய்யப்பட்டு பரப்புரை களத்திற்கு சென்றுள்ளனர். இது தொண்டர்கள் மத்தியில் ஜெல்லாகுமா? அதாவது ஒருங்கிணைந்து செயல்பட வைக்குமா? என்று பிரவீன் சக்ரவர்த்தியிடம் கேட்கப்பட்டது. அதற்கு, தங்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படுவது இல்லை என்பது தான் காங்கிரஸ் கட்சியினரின் பெரிய குறையாக உள்ளது. கூடுதல் சீட் கேட்டு பெற முடியவில்லை. இதனால் அதிருப்தியில் தான் இருக்கின்றனர். இதற்கு சரியான தீர்வை தற்போதைக்கு சொல்ல முடியாது என்று கைவிரித்துவிட்டார்.
அப்படியெனில் 2026 தேர்தலில் அதிருப்தி உடன் காங்கிரஸ் தொண்டர்கள் வேலை செய்வர் என்ற அர்த்தத்தில் பிரவீன் சக்ரவர்த்தி கருத்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கூடுதலாக பெற்ற அந்த 3 சீட்டின் பின்னணியில் கேம் சேஞ்சராக தவெக தலைவர் விஜய் இருந்துள்ளார். நேற்றைய தினம் திருநெல்வேலியில் தவெக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட விஜய், உண்மையான காங்கிரஸ் தங்களுடன் தான் இருப்பதாக தெரிவித்து, சர்ச்சை அடங்காமல் சம்பவம் செய்திருக்கிறார்.
தேர்தல் முடிவுகள் சொல்லும் கணக்கு
இந்த தேர்தலில் தவெக உடன் பெரிய கட்சிகள் யாரும் கூட்டணி வைக்காததற்கு, Untested என்ற விஷயத்தை முன்வைக்கின்றனர். இதற்கான பதில் 2026 தேர்தல் முடிவுகளில் தெரிந்துவிடும். அதன்பிறகு காங்கிரஸ் கட்சியும் தங்களை பலப்படுத்தி கொள்ள, எதிர்கால அரசியல் கருத்தில் கொண்டு முக்கிய முடிவுகளை எடுக்கும் சூழல் ஏற்படும். அப்போது திமுக என்ன செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

More Stories
‘நாட்டில் வேறு பிரச்சினையே இல்லையா?’ – திருப்பரங்குன்றம் குறித்த வழக்கு ஒன்று ரூ.50,000 அபராதத்துடன் தள்ளுபடி
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ‘ஸ்டாலின் முகாம்கள்’ நடத்தப்படும்
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றியத்தில் திமுக வேட்பாளர் பா.ராணி ஆதரித்து கழக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி தீவிர பிரச்சாரம் .