அரசியலில் பொறுப்புணர்வை அதிகரிக்கும் முயற்சியா, இல்லை அதிகாரத் துஷ்பிரயோகத்திற்கு வழிவகுக்கும் சட்டமா? 30 நாட்கள் சிறையில் இருந்தால் பிரதமர், முதல்வர்கள் உள்ளிட்ட உயரிய பதவியாளர்களை தற்காலிகமாக பதவியில் இருந்து விலக்கும் புதிய அரசமைப்புத் திருத்த பரிந்துரை நாடு முழுவதும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடுமையான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தொடர்ந்து 30 நாட்கள் சிறையில் இருக்கும் பிரதமர், மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர்கள் மற்றும் மாநில அமைச்சர்களை நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை தற்காலிகமாக பதவியில் இருந்து விலக்க வேண்டும் என்று130-ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை ஆய்வு செய்த நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரைத்துள்ளது. அதே நேரத்தில், குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டாலோ அல்லது விசாரணை முன்னேறாவிட்டாலோ மீண்டும் பதவியேற்கும் வாய்ப்பும் பரிந்துரையில் இடம்பெற்றுள்ளது.
பிரதமர், மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்ட பிறகும் நீண்டகாலம் பதவியில் நீடிப்பது குறித்து பல ஆண்டுகளாக விவாதங்கள் இருந்து வருகின்றன. இந்தச் சூழலில், 130-ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை ஆய்வு செய்த நாடாளுமன்ற கூட்டுக் குழு, 30 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் உயரிய பதவியாளர்களை நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை தற்காலிகமாக பதவியில் இருந்து விலக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
நிர்வாக நம்பிக்கையை பாதுகாக்கும் நடவடிக்கை?
இந்தப் பரிந்துரையின் முக்கிய அம்சம், இது நிரந்தர பதவி நீக்கம் அல்ல என்பதுதான். நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்படும் வரை ஒருவர் குற்றவாளி அல்ல என்ற சட்டக் கொள்கையை பாதிக்காமல், நிர்வாகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை பாதுகாக்கும் இடைக்கால நடவடிக்கையாகவே இதை கூட்டுக் குழு விளக்கியுள்ளது.
விடுதலையானால் மீண்டும் பதவிக்கு வாய்ப்பு
வரைவு அறிக்கையில் மற்றொரு முக்கிய மாற்றமும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டில் இருந்து சம்பந்தப்பட்ட நபர் விடுவிக்கப்பட்டாலோ அல்லது விசாரணையை அரசு குறிப்பிட்ட காலத்திற்குள் முன்னெடுக்கத் தவறினாலோ, தற்காலிக பதவி நீக்கம் தானாகவே முடிவுக்கு வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசியல் பழிவாங்கலுக்காக சட்டம் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க முயற்சி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எதிர்க்கட்சிகள் ஏன் எதிர்க்கின்றன?
இந்த மசோதா முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டபோதே, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தன. குறிப்பாக, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் அரசியல் அழுத்தம் கொடுக்க இந்தச் சட்டம் பயன்படுத்தப்படலாம் என்ற அச்சத்தை அவர்கள் வெளிப்படுத்தினர். இதன் காரணமாக, மசோதாவை ஆய்வு செய்த கூட்டுக் குழுவிலிருந்து சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விலகியதும் அரசியல் கவனத்தை ஈர்த்தது.
உச்சநீதிமன்றத்தின் நிலைப்பாடு என்ன?
அரசியல்வாதிகள் தொடர்பான குற்றவியல் வழக்குகள் பல ஆண்டுகள் நிலுவையில் இருப்பது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என்று உச்சநீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில் கருத்து தெரிவித்துள்ளது. மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை விரைந்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அந்த அணுகுமுறையையே இந்தப் பரிந்துரையும் பிரதிபலிக்கிறது.
முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி உள்ளிட்ட பலர், அரசியலில் குற்றப் பின்னணி கொண்டவர்களின் எண்ணிக்கையை குறைக்க விரைவான நீதிமன்ற விசாரணைகளே சிறந்த தீர்வு என்று பலமுறை கருத்து தெரிவித்துள்ளனர். சட்ட நிபுணர்களும், பதவியில் இருப்பவர்களுக்கு உயர்ந்த பொறுப்புணர்வு அவசியம் என்றாலும், குற்றம் நிரூபிக்கப்படுவதற்கு முன்பே அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வரக்கூடாது என்ற சமநிலையும் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
அடுத்த கட்ட நகர்வு என்ன?
கூட்டுக் குழுவின் இந்தப் பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டால், அதற்கேற்ப அதிகாரப்பூர்வ திருத்தங்களுடன் மசோதா மீண்டும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். இந்த மாற்றம் சட்டமாகும் பட்சத்தில், இந்திய அரசியலில் பதவிப் பொறுப்பு, சட்டநீதி மற்றும் ஜனநாயக நிர்வாகம் குறித்த புதிய விவாதத்திற்கு வழிவகுக்கும் என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.

More Stories
ரயில்வே ஏசி பெட்டிகளில் நூதன திருட்டு: 4 ஆண்டுகளில் 1.27 கோடி பெட் சீட், துண்டுகள் மாயம்
சோனம் வாங்சுக் உடல்நிலை கவலைக்கிடம்: 17 நாள் உண்ணாவிரதத்தை கைவிட வலுக்கும் கோரிக்கை
ஹார்முஸ் ஜலசந்தி தாக்குதலில் இந்திய மாலுமி உயிரிழப்பு – ஈரான் தூதருக்கு சம்மன்