நாகப்பட்டினம்/கும்பகோணம்: ராஜேந்திர சோழன் காலத்திய ஆனைமங்கலம் செப்பேடுகள் சுமார் 300 ஆண்டுகளுக்குப் பிறகு நெதர்லாந்தில் இருந்து பிரதமர் மோடி மூலமாக இந்தியா திரும்பியுள்ளது.
மாமன்னன் ராஜராஜ சோழனின் 21-வது ஆட்சியாண்டில், கி.பி.1005-ல் நாகப்பட்டினத்தில் விஜய கிடாரத்து அரசன் மாறவிஜயோத்துங்க வர்மனால் கட்டப்பட்ட ‘சூளாமணி வர்ம விகாரம்’ என்ற புத்த விகாரத்துக்கு 97 வேலி பரப்பு கொண்ட ஆனைமங்கலம் கிராமத்தை ராஜராஜ சோழன் பள்ளிச்சந்தமாக வாய்மொழியாக தானம் வழங்கினார்.
ராஜராஜன் 1014-ல் உயிரிழக்கும் வரை இச்சாசனம் உருவாகவில்லை. அவரது மகன் முதலாம் ராஜேந்திர சோழன் இதை எழுத்துப்பூர்வமாக பட்டயம் வெட்டி உறுதி செய்தார். 30 கிலோ எடை கொண்ட 21 செப்பேடுகள், ஒரு வெண்கல வளையத்தால் பிணைக்கப்பட்டுள்ளன. வளையத்தில் சோழ அரச முத்திரை உள்ளது. 5 ஏடுகள் வடமொழியிலும், 16 ஏடுகள் தமிழிலும் உள்ளன.
குலோத்துங்க சோழன் உறுதி செய்த 3 சிறிய ஏடுகளும் இணைக்கப்பட்டுள்ளன. சைவ சமயத்தை சார்ந்த ராஜராஜ சோழன், ஒரு புத்த விகாரத்துக்கு ஊரையே தானம் செய்தது தமிழ் மன்னர்களின் சமய பொறையை காட்டுகிறது. தமிழ் ஏடுகள் அன்றைய நிர்வாக சொல்லாடல், நில அளவை முறை, சட்டப்பூர்வ ஆவண மரபை பதிவு செய்கின்றன. 11-ம் நூற்றாண்டின் சர்வதேச வர்த்தகம், பவுத்த- சைவ நல்லிணக்கம், சோழர்களின் நிர்வாகத் திறன், கடல்கடந்த ராஜதந்திர உறவுக்கு இது சான்றாக விளங்குகிறது. சோழர் அரசர் பட்டியல்,அதிகாரிகள் பட்டியல், வென்ற நாடுகள் குறிப்பும் உள்ளது.
18-ம் நூற்றாண்டு டச்சு ஆதிக்கத்தின்போது ஃப்ளோரன்சியஸ் கேம்பர் என்பவரால் நாகையிலிருந்து இந்த செப்பேடுகள் நெதர்லாந்து எடுத்துச் செல்லப்பட்டன. ஹமேக்கர் குடும்பத்தினர் வசம் இருந்து, 1862-ல் லெய்டன் பல்கலைக்கழக அருங்காட்சியத்துக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன. இவற்றை மீட்டு தமிழகத்துக்கு கொண்டுவர வேண்டும் என்று ஏராளமான தமிழ் ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் கொடுத்தனர்.
இந்நிலையில்தான் நெதர்லாந்து அரசு தற்போது பிரதமர் மோடியிடம் அவற்றை நேரடியாக வழங்கி உள்ளது. இவற்றை கங்கைகொண்ட சோழபுரத்தில் பொதுமக்கள் பார்வைக்கு நிரந்தரமாகக் காட்சிப்படுத்த வேண்டும் என கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டுக்குழும தலைவர் ஆர்.கோமகன் வலியுறுத்தியுள்ளார்.
ஆனைமங்கலம் செப்பேடுகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழனின் கொடைத்திறன், மதநல்லிணக்கம், நிர்வாக நேர்மை, சர்வதேச பார்வை ஆகியவற்றை பேசும் காலக்கண்ணாடியாக உள்ளது. அதை கங்கைகொண்ட சோழபுரத்தில் காட்சிப்படுத்த வேண்டும் என்பது தமிழ் ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
வைகோ வலியுறுத்தல்: இதனிடையே ஆனைமங்கலம் செப்பேடுகளை நாகப்பட்டினத்தில் பாதுகாப்புடன் காட்சிப்படுத்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். மேலும் இந்தச் செப்பேடுகளை வெறும் நிர்வாக ஆவணங்களாகக் கருதவில்லை. மத்தியகால தென்னிந்தியாவில் தமிழ்நாட்டின் பன்முகப் பண்பாடு மற்றும் வணிகத் தொடர்புகள் நிறைந்த உலகின் முக்கிய தடயங்களாக திகழ்கின்றன.
பல ஆண்டு கால தூதரக முயற்சிகளுக்கு பிறகு நெதர்லாந்து அரசு, இந்தியாவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்துள்ளது. இவற்றை நாகப்பட்டினம் அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைத்து பொது மக்களுக்கு காட்சிப்படுத்த மத்திய அரசும் தமிழக அரசும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிக்கையொன்றில் வலியுறுத்தியுள்ளார்.

More Stories
பிரதமர் மோடிக்கு ஸ்வீடனின் உயரிய விருதை வழங்கி கவுரவித்த இளவரசி விக்டோரியா
கன்னிப் பெண் மவுனம் திருமணத்துக்கு சம்மதம்: தலிபான்கள் சட்டத் திருத்தத்தில் மாற்றம்
ஈரானின் ட்ரோன் தாக்குதலால் ஐக்கிய அரபு அமீரகத்தின் பராக் அணு மின் நிலையத்தில் தீ