கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் அடுத்த மாதம் 23 மற்றும் 29ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு முதல்வர் மம்தா பானர்ஜி திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது: திரிணமூல் காங்கிரஸ் தலைமையிலான அரசு மேற்கு வங்கத்தில் 15 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்த காலகட்டத்தில் அனைத்து துறைகளிலும் மிகப்பெரிய வளர்ச்சியை மேற்கு வங்கம் கண்டுள்ளது. நாங்கள் எங்கள் பணியின் மீது நம்பிக்கை வைத்துள்ளோம்.
மேற்கு வங்க மாநிலத்தின் பொருளாதாரம் கடந்த 15 ஆண்டுகளில் 6 மடங்கு வளர்ச்சியடைந்துள்ளது. தனி நபரின் சராசரி வருமானம் 3 மடங்கு அதிகரித்துள்ளது. 1.72 கோடி மக்களை ஏழ்மையிலிருந்து மாநில அரசு மீட்டுள்ளது. மேற்குவங்க மாநிலத்தின் மூலதன செலவு 18 மடங்கு அதிகரித்துள்ளது.
கட்டமைப்பு செலவு 7 மடங்கு அதிகரித்துள்ளது. வேலை வாய்ப்பின்மையின் வீதம் கடந்த 6 ஆண்டுகளில் 45.65 சதவீதம் குறைந்துள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் மேற்கு வங்கத்தை நாட்டிலேயே 3-வது பெரிய பொருளாதார மாநிலமாக மாற்ற உறுதி எடுத்துள்ளோம். கடந்த 2 நிதியாண்டுகளில் மேற்கு வங்கம் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளது.
இதன் சராசரி 10.5 சதவீதமாக உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் மேற்கு வங்கத்தின் பொருளாதாரம் 40 லட்சம் கோடியாக உயரும். நவீன வசதிகளுடன் கூடிய உலகளாவிய மையம், நீர்வழிப் போக்குவரத்து, புதிய போக்குவரத்து மையங்கள் மேற்கு வங்கத்தில் உருவாகி, கிழக்கு இந்தியாவின் நுழைவாயிலாக மேற்கு வங்கம் மாறும். இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.

More Stories
‘ஏஐ’யால் வழக்கறிஞராக முடியாது: உச்ச நீதிமன்ற நீதிபதி கருத்து
யமஹா மியூசிக் இந்தியா நிறுவனத்தின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு
ஏப்ரலில் தொடங்குகிறது மக்கள் தொகை கணக்கெடுப்பு! – ஏற்படுத்தப்போகும் தாக்கங்கள் என்னென்ன?