சென்னை: வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் கலைக் கல்லூரியில் நேற்று போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
சென்னை காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் நிகழ்ச்சியை தொடங்கிவைத்து, மாணவர்கள் மத்தியில் பேசியதாவது: இன்றைய சமூகத்தில் சாலை விபத்துகள், சைபர் மோசடிகள் மற்றும் போதைப்பழக்கம் ஆகியவை மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளன.
சாலை விதிகளை முறையாக கடைபிடித்தால் பெரும்பாலான விபத்துகளைத் தவிர்க்க முடியும். தமிழகத்தில் பொதுமக்கள் தினமும் ரூ.13 கோடி முதல் ரூ.15 கோடி வரை சைபர் மோசடிகளால் பணத்தை இழக்கின்றனர். அறியாமை, விழிப்புணர்வு இல்லாததே இதற்கு முக்கிய காரணம்.
போதைப் பொருள், மது ஆகியவை ஒருவரின் குடும்பத்தையும் சமூகத்தையும் சீரழிக்கும். எனவே மாணவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
முன்னதாக நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், `வாழ்வைத் தேர்ந்தெடுங்கள், போதைக்கு இல்லை சொல்லுங்கள்’ என்ற தலைப்பில் மாணவர்களின் மவுன நாடகம் அரங்கேற்றப்பட்டது.
தொடர்ந்து சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ், `நான் போதைப் பொருளுக்கு எதிரானவன்’ என்ற வாசகத்துடன் கூடிய புதிய போதைப் பொருள் எதிர்ப்பு இலச்சினையை அறிமுகப்படுத்தினார்.
தொடர்ந்து அவரது தலைமையில் சுமார் 6 ஆயிரம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் போதைப் பொருளுக்கு எதிராக உறுதிமொழி ஏற்றனர்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணையர் கபில் குமார் சி.சரத்கர், கல்லூரி முதல்வர் கே.சிவகுமாரி, ஐஐடி மெட்ராஸ் சமூக முன்முயற்சி மற்றும் வெளித்தொடர்பு தலைவர் என்.ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

More Stories
ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்: ராகுல் காந்தி கைதுக்கு தவெக கண்டனம்
தமிழகம் முதலீட்டில் முன்னணி… உள்கட்டமைப்பில் மேலும் கவனம் தேவை!
காயத்துடன் கைதுசெய்யப்பட்ட ராகுல் காந்தி..?’ மத்திய அரசுக்கு தவெக கண்டனம்!