சென்னை: அரசு மருத்துவமனைகளின் மேம்பாட்டுக்கு நன்கொடை பெறும் வகையில் ‘நலம் TN’ என்ற இணையதளத்தை தொடங்கி வைத்த முதல்வர் விஜய், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 751 உதவி மருத்துவர்கள், 1,393 சுகாதார ஆய்வாளர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
தமிழக சுகாதாரத்துறை சார்பில், தமிழ்நாடு சுகாதார அறக்கட்டளை வழியாக அரசு மருத்துவமனை மேம்பாட்டுக்கு அறக்கட்டளை மற்றும் சமூகப் பொறுப்பு நிதி வழங்கும் வகையில் ‘நலம் TN’ (www.tnhealthfoundation.org) என்ற புதிய இணையதளத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது.
இதில் பங்கேற்ற முதல்வர் விஜய், இணையதளத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் பேசும்போது, “தமிழகத்தின் 38 மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உயர் சிறப்பு சிகிச்சைகள் வழங்குதற்காக, உள்கட்டமைப்பு மற்றும் உயர்தர மருத்துவ உபகரணங்களை மேம்படுத்தும் நோக்கில், பெரிய தொழில் நிறுவனங்கள், பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதி மற்றும் தொண்டு நிறுவனங்கள், முன்னாள் மருத்துவக் கல்லூரி மாணவர்கள், தனிப்பட்ட நன்கொடையாளர்கள் ஆகியோரிடமிருந்து நன்கொடை பெற்று வெளிப்படையான முறையில் செயல்படுத்துவதற்காக, தமிழ்நாடு சுகாதாரதிட்டத்தின் கட்டமைப்பின்கீழ் இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த இணையதளம் மூலம் உங்களுக்கு விருப்பமான அரசு மருத்துவமனைக்கு நன்கொடை வழங்க முடியும்” என்றார்.
இந்த நிகழ்வில் அரசு மருத்துவ கல்லூரிகளின் பயன்பாட்டுக்காக சென்னையிலுள்ள கேப்ளின் பாய்ன்ட் லெபாரட்டரீஸ், அப்போலோ மருத்துவமனை குழுமத்தினர் சமூக பொறுப்பு நிதியில் இருந்து தலா ரூ.1 கோடிக்கான காசோலை மற்றும் ஓசூரிலுள்ள டைட்டன் இன்ஜினீயரிங் அண்டு ஆட்டோமேஷன் நிறுவனத்தினர் சமூக பொறுப்பு நிதியில் இருந்து ரூ.60 லட்சத்துக்கான காசோலையை முதல்வரிடம் வழங்கினர்.
சென்னையைச் சேர்ந்த எஸ்.சத்யா என்பவர், 2 ஆண்டுகளுக்கு முன்பு எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தபோது அம்மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவபணியாளர்கள் தாயையும், குழந்தையையும் அன்போடும் கவனித்து கொண்டனர்.
அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ‘நலம் TN’ திட்டத்தில் அம்மருத்துவமனையின் சில்லறை செலவினங்களுக்காக க்யூஆர் கோடு மூலமாக ஆயிரம் ரூபாயை நன்கொடையாக முதல்வர் முன்னிலையில் சத்யா வழங்கினார்.
கட்டிடங்கள் திறப்பு
அதைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் ரூ.139 கோடியே 47 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள மருத்துவக் கட்டிடங்களை முதல்வர் விஜய் திறந்துவைத்து, நவீன மருத்துவ உபகரணங்களின் பயன்பாட்டினையும் தொடங்கி வைத்தார்.
மேலும், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 751 உதவி மருத்துவர்கள் மற்றும் 1,393 சுகாதார ஆய்வாளர்களுக்கு (நிலை–2) பணிநியமன ஆணைகளை முதல்வர் விஜய் வழங்கினார்.
முதல் பணிநியமன ஆணையை, மேடையில் இருந்து கீழே இறங்கிச் சென்று மாற்றுத்திறனாளி பெண் மருத்துவருக்கு வழங்கினார்.
இறுதியாக பணிநியமன ஆணை பெற்றவர்களுடன் முதல்வர் விஜய், குழு புகைப்படம் மற்றும் செல்போனில் செல்ஃபி எடுத்து கொண்டார்.

More Stories
‘ஃப்ரிட்ஜ் வாங்க கூப்பன்’ – சி.விஜயபாஸ்கர், தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
ஓசூர் அத்திப்பள்ளியில் பேருந்துகள் நிறுத்தம்: தமிழக – கர்நாடகா எல்லையில் போலீசார் குவிப்பு
சட்டசபையில அப்பாவை தேடுறீங்க.. பெற்ற அப்பாவா? வளர்த்த அப்பாவா? விஜய்யை வம்புக்கு இழுத்த ஆர்.பி.உதயகுமார்!