February 28, 2026

79 நாடுகளுக்கு 99 முறை பயணங்கள்! 19 நாடாளுமன்றங்களில் உரை! பிரதமர் மோடி சாதனை!

வெளிநாட்டு நாடாளுமன்றங்களில் பிரதமர் மோடி உரையாற்றி சாதனை படைத்தது பற்றி…

News image

பிரதமர் நரேந்திர மோடி

Updated On :28 பிப்ரவரி 2026, 10:58am

இணையதளச் செய்திப் பிரிவு

புதுதில்லி: பிரதமர் நரேந்திர மோடி 2014 ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்றத்தில் இருந்து பிப்ரவரி 2026 வரை 79 நாடுகளுக்கு 99 முறை பயணங்கள் மேற்கொண்டு 19 வெளிநாட்டு நாடாளுமன்றங்களில் உரையாற்றி சாதனை படைத்துள்ளார்.

இது இந்தியாவின் நிர்வாகத் தலைவருக்கான சாதனை என பாஜக பாராட்டியிருப்பதுடன் இந்த சாதனையை “இந்தியாவின் வளர்ந்து வரும் உலகளாவிய அந்தஸ்து, ராஜதந்திர நம்பகத்தன்மை, தலைமைத்துவம் மற்றும் தார்மீக அதிகாரத்தின் பிரதிபலிப்பு” என்று கூறியுள்ளது.

இந்திய பிரதமர்களில் அதிகயளவில் வெளிநாட்டு நாடாளுமன்றங்களில் உரையாற்றியவர்களில், குறிப்பாக அனைத்து காங்கிரஸ் பிரதமர்களையும் விட மோடி அதிகமாக உரையாற்றியுள்ளார்.

“பிரதமர் மோடி வெளிநாட்டு நாடாளுமன்றங்களில் பேசும்போது, ​​உலகமே அவரது பேச்சை கேட்கிறது. அவர் அமெரிக்க காங்கிரஸின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றியதிலிருந்து இஸ்ரேலின் நெசெட் வரை,” என்று இதுவரை 19 வெளிநாட்டு நாடாளுமன்றங்களில் உரையாற்றி உள்ளார் என்று பாஜக ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

இந்த சாதனையை அது “இந்தியாவின் வளர்ந்து வரும் உலகளாவிய அந்தஸ்து, ராஜதந்திர நம்பகத்தன்மை, தலைமைத்துவம் மற்றும் தார்மீக அதிகாரத்தின் பிரதிபலிப்பு” என்றும் அந்தந்த நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் மற்றும் நட்புறவையும் வலுப்படுத்தியுள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஏழு வெளிநாட்டு நாடாளுமன்றங்களில் உரையாற்றியுள்ளார், இந்திரா காந்தி நான்கு மற்றும் ஜவஹர்லால் நேரு மூன்று நாடாளுமன்றங்களில் உரையாற்றியுள்ளார் . முன்னாள் பிரதமர்கள் ராஜீவ் காந்தி மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோர் தலா இரண்டு வெளிநாட்டு நாடாளுமன்றங்களில் உரையாற்றியுள்ளனர்.

2014 ஆம் ஆண்டு, பதவியேற்ற சிறிது நாள்களிலேயே ஆஸ்திரேலியா, பிஜி, நேபாளம் மற்றும் பூடான் நாடாளுமன்றங்களில் மோடி உரையாற்றினார். 2015 மார்ச் மாதம் மொரிஷியஸ் தேசிய சட்டப்பேரவையிலும், இலங்கை நாடாளுமன்றத்திலும் உரையாற்றினார். அதே ஆண்டில், மங்கோலியா நாடாளுமன்றத்தில் பெரிதும் பாராட்டப்பட்ட உரையை ஆற்றினார். பின்னர் நவம்பரில் இங்கிலாந்து நாடாளுமன்றத்திலும் உரையாற்றினார்.

டிசம்பர் 2015 இல் ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். ஜூன் 2016 இல் அமெரிக்க காங்கிரஸின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றியபோது அவரது உரை, அனைத்து உரைகளுக்கும் மேலானதாக இருந்தது. 2018 இல் அவர் உகாண்டா நாடாளுமன்றத்திலும், 2019 இல், மாலத்தீவு நாடாளுமன்றத்திலும் உரையாற்றினார். 2023 இல் மீண்டும் அமெரிக்க காங்கிரஸின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார்.Advertise with us

அமெரிக்க காங்கிரஸில் ஆற்றிய இரண்டாவது உரையில், “ஜனநாயகம் என்பது விவாதத்தையும் உரையாடலையும் வரவேற்கும் கருத்து. ஜனநாயகம் என்பது சிந்தனைக்கும் வெளிப்பாட்டிற்கும் சிறகுகளைத் தரும் கலாசாரம். பழங்காலத்திலிருந்தே இத்தகைய மதிப்புகளைக் கொண்டிருப்பது இந்தியாவுக்கு ஆசீர்வாதம். ஜனநாயக உணர்வின் பரிணாம வளர்ச்சியில், இந்தியா ஜனநாயகத்தின் தாய்.” என்று குறிப்பிட்டார்.

2024 ஆம் ஆண்டு கயானா நாடாளுமன்றத்திலும் ஜூலை 2025 இல் கானா நாடாளுமன்றத்திலும் உரையாற்றினார், அதைத் தொடர்ந்து அதே மாதத்தில் டிரினிடாட் மற்றும் டொபாகோ நாடாளுமன்றத்திலும் நமீபியா நாடாளுமன்றத்திலும் உரையாற்றினார். அந்த ஆண்டின் பிற்பகுதியில், அவர் எத்தியோப்பியா நாடாளுமன்றத்திலும் உரையாற்றினார்.

சமீபத்தில், அவர் இஸ்ரேலில் நெசெட்டில் உரையாற்றினார், மேலும் இஸ்ரேலிய நாடாளுமன்றத்தின் மிக உயர்ந்த விருதைப் பெற்றார். நெசெட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் தாக்குதலை எழுப்பி இஸ்ரேலிய குடிமக்களின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்தார்.Advertise with us

பிப்ரவரி 2026 நிலவரப்படி, மோடி 79 நாடுகளுக்கு 99 முறை சர்வதேச பயணங்களை மேற்கொண்டு 19 நாடாளுமன்றங்களில் உரையாற்றி சாதனை படைத்துள்ளார்.

Spread the love