நேற்று நடைபெற்ற கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் நட்சத்திர வீரர் ஹேரி கேன் படைத்த சாதனைக்கு பிறகு 4-2 என குரோஷியாவை தோற்கடித்தது இங்கிலாந்து அணி.
உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து 4-2 என்ற கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி அசத்தியது. ஹேரி கேன் இரண்டு கோல்கள் அடித்து, உலகக்கோப்பை வரலாற்றில் பெனால்ட்டி மூலம் அதிக கோல்கள் அடித்த வீரராக உயர்ந்தார். மேலும், இங்கிலாந்துக்காக உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்து வீரராகவும் மாறினார்.
கனடா, மெக்ஸிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்தும் FIFA கால்பந்து உலகக்கோப்பை தொடர், ஜூன் 11ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. 48 அணிகள் பங்கேற்றுள்ள இந்தத் தொடரில், நாளுக்கு நாள் பல்வேறு சுவாரஸ்யங்களும் அரங்கேறி வருகின்றன.

கால்பந்து உலகக்கோப்பை 2026
இந்த நிலையில், நேற்று நடைபெற்ற கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் குரோஷியாவை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அசத்தியது. 2 கோல்களை அடித்த நட்சத்திர வீரர் ஹேரி கேன் புதிய சாதனையை தன் பெயரில் எழுதினார்.
4-2 என வென்ற இங்கிலாந்து..
அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில், முன்னாள் சாம்பியனான இங்கிலாந்து அணி 4-2 கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தியது. ஆட்டத்தின் 12-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்ட்டி கிக் வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட ஹேரி கேன், இங்கிலாந்தின் கோல் கணக்கை தொடங்கி வைத்தார். ஆனால் அதிகநேரம் எடுத்துக்கொள்ளாத குரோஷியா அணி 36-வது நிமிடத்தில் கோல் அடித்து பதிலடி கொடுத்தது. மார்ட் டின் படுரினா தன்னுடைய மேஜிக்கால் இங்கிலாந்துக்கு அழுத்தம் கொடுத்தார்.
இதனால் ஆட்டம் சமனிலை காண, அதை நீண்ட நேரம் நீடிக்க விடாத ஹேரி கேன், 42-வது நிமிடத்தில் மீண்டும் கோல் அடிக்க இங்கிலாந்து 2-1 என முன்னிலைபெற்றது. ஆனால் விடாப்பிடியாக விளையாடிய குரோஷியா தரப்பில் பெடார் முசா (45+5) அடித்த கோலால், முதல் பாதி ஆட்டம் 2-2 என சமநிலையுடன் முடிய ஆட்டத்தில் அனல்பற்றியது.

ஹேரி கேன்
2-வது பாதியில் போட்டி விறுவிறுப்பாக தொடங்க, ஆட்டம் தொடங்கிய 2-வது நிமிடத்திலேயே (47) ஜூட் பெலிங்கம் இங்கிலாந்தின் கோல் கணக்கை 3-ஆக உயர்த்தினார். அதன்பிறகு அழுத்தத்திற்கு சென்ற குரோஷியா என்னதான் கோல் அடிக்கும் முயற்சியில் இறக்கினாலும் அவர்களால் வாய்ப்பை சரியாக செயல்படுத்த முடியவில்லை. பின்னர் ஆட்டம் நிறைவடையும் தருணத்தில் (85) மார்கஸ் ராஷ்ஃபோர்டு இங்கிலாந்துக்காக 4வது கோல் அடிக்க, 4-2 கோல் கணக்கில் இங்கிலாந்து அணி குரோஷியாவை தோற்கடித்தது.
ஹேரி கேன் படைத்த சாதனை..
பெனால்ட்டியில் அதிக கோல்கள்
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பெனால்ட்டி கிக் வாய்ப்பில் அதிக கோல்கள் அடித்தவராக கேன் சாதனை படைத்துள்ளார். இதுவரை 5 கோல்களை அடித்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

இங்கிலாந்துக்காக அதிக கோல்கள்
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்துக்காக அதிக கோல்கள் (10) அடித்தவராக சாதனை படைத்தார் ஹேரி கேன். முன்னாள் வீரர் கேரி லின்கர் 10 கோல்கள் (1986-1990) அடித்ததே சாதனையாக உள்ள நிலையில், தற்போது ஹேரி கேன் அதை சமன் செய்துள்ளார்.

More Stories
ஹாக்கியில் ஜெர்மனியை வீழ்த்தியது இந்தியா
‘லயன்’ மெஸ்ஸி ஹாட்ரிக்… உலகக் கோப்பை சாதனை – அல்ஜீரியாவை பந்தாடிய அர்ஜெண்டினா
இந்தியா செய்த மிகப்பெரிய தவறு.. பேட் பிடிக்காமல் 10 ரன்கள்.. அதிர்ஷ்டத்தால் இலங்கை வெற்றி!