June 23, 2026

’போரில் வென்ற ஈரான்..’ – 92%-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களின் கருத்தால் அதிர்ச்சி!

92%-க்கும் அதிகமான இஸ்ரேலியர்கள் ஈரான் போரில் வெற்றி பெற்றதாகக் கருதுகின்றனர்; 12% பேர் மட்டுமே இஸ்ரேல் முழுமையான வெற்றியை அடைந்ததாகக் கூறுகின்றனர்

அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் மோதலுக்குப் பிறகு, ட்ரம்ப் மற்றும் மசூத் பெசெஷ்கியன் மின்னணு ஒப்பந்தம் கையெழுத்திட்டதன் பின்னணியில், ஜெருசலேமின் ஹீப்ரு பல்கலைக்கழக ஆய்வு பெரும் அதிர்ச்சியை வெளிப்படுத்துகிறது. 3,644 பேரில் 92%-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் போரில் ஈரான் வென்றதாக நம்புகின்றனர்; இஸ்ரேலின் நீண்டகால பாதுகாப்பு பலவீனமடைந்ததாகவும் கருதுகின்றனர்.

செய்தியாளர்; M. மீரா

பிப்ரவரி 28ஆம் தேதியன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல்களை நடத்தியதன் மூலம் இந்தப் போர் தொடங்கியது. ஏப்ரல் 8 அன்று போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதும் தாக்குதல்கள் தொடர்ந்தவாறே இருந்தது. இந்நிலையில் அமெரிக்கா-ஈரான் இடையிலான போரை நிரந்தரமாக நிறுத்தும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் மின்னணு முறையில் ஜூன் 17 அன்று கையெழுத்திட்டனர். இதனைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்தில் ஜூன் 21 அன்று முதற்கட்டமாக பேச்சுவார்த்தையும் நடைபெற்றது.

ட்ரம்ப் - பெசெஷ்கியன்

இந்நிலையில் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் மற்றும் ஈரானின் திறன்கள் பலவீனப்படுத்தப்பட்டதாக கூறப்பட்டாலும் 100 நாட்களைக் கடந்து நடைபெற்ற அமெரிக்க – இஸ்ரேல் – ஈரான் மோதலில் ஈரான் வெற்றி பெற்றுள்ளதாக 92%-க்கும் அதிகமான இஸ்ரேலியர்கள் கருதுவதாக ஜெருசலேமின் ஹீப்ரு பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

ஜூன் 17 மற்றும் 20-க்கு இடையில் ஜெருசலேமின் ஹீப்ரு பல்கலைக்கழகம் நடத்திய புதிய கணக்கெடுப்பில் 92 சதவீதத்திற்கும் அதிகமானோர் – (அவர்கள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான வலதுசாரி ஆட்சியை ஆதரிப்பவர்கள்) ஈரான் போரில் வெற்றி பெற்றதாகக் கருதுகின்றனர். இந்த கணக்கெடுப்பில் மொத்தம் 3,644 பேர் பதிலளித்தனர்.

Hebrew university, Jerusalem

இவர்களில் சுமார் 82.9 சதவீதத்தினர், ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் நடவடிக்கைகள் அந்நாட்டின் நீண்டகாலப் பாதுகாப்பை பலவீனப்படுத்தியுள்ளதாகக் கருதுகின்றனர். மேலும், அந்த ஆய்வின்படி, இஸ்ரேல் நடத்திய இந்தத் தாக்குதலுக்கான நோக்கங்களை அடைய இஸ்ரேல் தவறிவிட்டதாகவும் அவற்றில் சிலவற்றை மட்டுமே பெற்றதாகவும் 87.8 சதவீத இஸ்ரேலியர்கள் கருதுகின்றனர்.

Spread the love