ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்றத்தின் சாதாரண கூட்டம், நகர்மன்றத் தலைவர் சஹானாஸ் ஆபிதா தலைமையிலும், நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணவேணி முன்னிலையிலும் நடைபெற்றது.
கூட்டத்தில், புதிய பேருந்து நிலையம் அருகே நகராட்சிக்குச் சொந்தமான பழைய மீன் மார்க்கெட் சேதமடைந்ததால், அதனை இடித்து புதிய கட்டிடம் அமைக்க வேண்டும் என்ற தீர்மானம் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு, கட்டிடம் இடிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டதாக உறுப்பினர்கள் தெரிவித்தனர். ஆனால், புதிய மீன் மார்க்கெட் கட்டுவதற்கான நடவடிக்கை இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என அவர்கள் குற்றம்சாட்டினர்.

மேலும், புதிய கட்டிடம் அமைக்கப்படும் வரை பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் பயன்பெறும் வகையில் தற்காலிக மீன் கடைகளை அமைக்க வேண்டும் என்ற தீர்மானமும் பலமுறை நிறைவேற்றப்பட்டிருந்தும், அதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
இதன் காரணமாக, புதிய பேருந்து நிலையம் அருகே தனியார் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருவதால், போக்குவரத்து நெரிசலும், பொதுமக்களுக்கு சிரமமும் ஏற்படுவதாக அவர்கள் கூறினர். எனவே, நகராட்சி நிர்வாகம் உடனடியாக தற்காலிக மீன் கடைகளை அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றும், இல்லையெனில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து, நகரின் அடிப்படை வசதிகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. சாலை வசதி மேம்படுத்துதல், தெருவிளக்குகள் அமைத்தல், குப்பைகளை முறையாக அகற்றுதல், கால்வாய்களை மூடி அமைத்தல், பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளை விரைந்து முடித்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. மேலும், நடைபெற்று வரும் பணிகளை ஒப்பந்ததாரர்களிடம் முறையாகக் கண்காணித்து, காலதாமதம் ஏற்படுத்தும் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

More Stories
10-07-2026
10-07-2026
10-07-2026