கடந்த ஜூன் 24-ம் தேதி வெனிசுலா நாட்டில் இரண்டு சக்திவாய்ந்த பூகம்பங்கள் ஏற்பட்டன. இந்த பூகம்பங்களால் இதுவரை 3,800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 16,700-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெறுகின்றனர். சுமார் 50,000-க்கும் மேற்பட்டோரை காணவில்லை.
அமெரிக்கா, இந்தியா உட்பட 60-க்கும் மேற்பட்ட நாடுகள், பன்னாட்டு அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வெனிசுலாவில் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
ஒடிசாவை சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியன், பேரிடர் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் திறன் வாய்ந்தவர். தமிழகத்தின் மதுரையை பூர்விகமாகக்கொண்ட இவர், பேரிடர் மீட்புப் பணிகளுக்காக சர்வதேச அளவில் புகழ் பெற்று விளங்குகிறார்.
வெனிசுலா அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸின் சிறப்பு அழைப்பின்பேரில் வி.கே.பாண்டியன் தற்போது வெனிசுலாவில் முகாமிட்டு மீட்பு, நிவாரண பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
ஒடிசா மாநிலத்தின் மேம்பட்ட பேரிடர் மீட்பு நிவாரண மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டு வெனிசுலா மீட்புக் குழுவினருக்கு அவர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். குறிப்பாக மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவ குழுவினர் மற்றும் நிவாரண உதவிகளை வழங்கும் குழுவினருடன் வி.கே.பாண்டியன் இணைந்து பணியாற்றி வருகிறார்.
வெனிசுலா அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸை சில நாட்களுக்கு முன்பு அவர் சந்தித்துப் பேசினார்.அப்போது கடந்த 1999-ம் ஆண்டில் ஒடிசாவை அதிதீவிர புயல் தாக்கியபோது மேற்கொள்ளப்பட்ட நிவாரண பணிகள் குறித்த அனுபவங்களை வெனிசுலா அதிபருடன் அவர் பகிர்ந்து கொண்டார்.
ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் ஆட்சிக் காலத்தில் உலகின் தலைசிறந்த பேரிடர் மீட்பு, நிவாரண நடைமுறைகள் உருவாக்கப்பட்டன. இதன்காரணமாக புயல் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் ஒடிசாவில் உயிரிழப்புகள் முழுமையாக தவிர்க்கப்பட்டன. பொருட்சேதம் பெருமளவில் குறைக்கப்பட்டது. இதே நடைமுறைகளில் வெனிசுலாவில் மீட்பு, நிவாரண பணிகளை மேற்கொள்ள அதிபர் டெல்சிக்கு, வி.கே.பாண்டியன் முக்கிய ஆலோசனைகளை வழங்கினார்.
வெனிசுலா அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் மற்றும் குழுவினருடன் தீவிர ஆலோசனையில் வி.கே. பாண்டியன்.
ஐ.நா. சபையின் பேரிடர் தடுப்பு அமைப்பு (யுஎன்டிஆர்ஆர்), ஐ.நா. சபையின் ஆசியா பசிபிக் பொருளாதார, சமூக அமைப்பு மற்றும் உலக வங்கி ஆகிவை ஒடிசாவின் பேரிடர் மீட்பு பணிகளைப் பாராட்டி உள்ளன. ஒடிசாவில் பேரிடர் மீட்புப் பணிகளின்போது தொழில்நுட்பங்கள் முழுமையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மக்கள் நலனுக்கு முன்னுரிமை அளித்து நிவாரண முகாம்கள் அமைக்கப்படுவது வழக்கம். இவற்றை முன்மாதிரியாகக் கொண்டு வி.கே. பாண்டியன் அளிக்கும் ஆலோசனைகளின்படி வெனிசுலாவில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
வெனிசுலா அதிபர் டெல்சி,புட்டபர்த்தி சாய்பாவின் தீவிர பக்தர் ஆவார். அண்மையில் அவர் இந்தியாவில் அரசு முறை பயணம் மேற்கொண்டபோது புட்டபர்த்திக்கு நேரில் சென்று வழிபாடு நடத்தினார். புட்டபர்த்தி சாய்பாபாவின் போதனைகள் குறித்தும் அதிபர் டெல்சியும், வி.கே. பாண்டியனும் பரஸ்பரம் ஆன்மிக கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.
வெனிசுலா மீட்புப் பணிகளில் இந்திய ராணுவம் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. “ஆபரேஷன் அமிஸ்டாட்” என்ற பெயரில் விமானங்களில் வெனிசுலாவுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு உள்ளன. இந்திய ராணுவத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் உட்பட 41 மருத்துவ பணியாளர்கள் வெனிசுலாவில் மருத்துவ முகாம்களை நடத்தி வருகின்றனர். இந்திய ராணுவத்தின் “பீஷ்ம் க்யூப்” என்ற அவசர கால கூடார மருத்துவமனைகள் வெனிசுலாவுக்கு இலவசமாக வழங்கப்பட்டு உள்ளன.
இந்திய ராணுவத்தின் மனிதாபிமான உதவிகள் மற்றும் மருத்துவ முகாம்களை வி.கே.பாண்டியன் நேரில் பார்வையிட்டார். அங்கு தன்னலமின்றி பணியாற்றி வரும் இந்திய வீரர்களுக்கு அவர் மனதார பாராட்டுகளை தெரிவித்தார்.

More Stories
தமிழக சோழர் கால சிலைகள் மீண்டும் இந்தியா திரும்புகின்றன
ரூ.10 லட்சமாக உயர வாய்ப்பு – ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டமும், சில முக்கிய தகவல்களும்
வெளிநாட்டில் எம்பிபிஎஸ் படித்தவர்களுக்கான கட்டாய தகுதித் தேர்வில் 12% பேர் மட்டுமே தேர்ச்சி