July 10, 2026

“கர்நாடக அணைகளின் நீர் இருப்பு உயர்வு; தினமும் 2 டிஎம்சி நீர் திறக்க வலியுறுத்துக” – அன்புமணி

சென்னை: கர்நாடகம் மற்றும் கேரளத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில்  தென்மேற்கு பருவமழை கடந்த சில நாள்களாக தீவிரமடைந்திருப்பதைத் தொடர்ந்து, காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளின் நீர் இருப்பு 50.63 டி.எம்.சியாக அதிகரித்திருக்கிறது. கடந்த 9 நாள்களில் கர்நாடக அணைகளின் நீர்  இருப்பு 25 டி.எம்.சிக்கும் கூடுதலாக உயர்ந்துள்ள நிலையில் நாளை முதல் காவிரியில் தினமும் 2 டி.எம்.சி அளவுக்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “கர்நாடகம் மற்றும் கேரளத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை கடந்த சில நாள்களாக தீவிரமடைந்திருப்பதைத் தொடர்ந்து, காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளின் நீர் இருப்பு 50.63 டி.எம்.சியாக அதிகரித்திருக்கிறது. கடந்த 9 நாள்களில் கர்நாடக அணைகளின் நீர் இருப்பு 25 டி.எம்.சிக்கும் கூடுதலாக உயர்ந்துள்ள நிலையில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுப்பது கண்டிக்கத்தக்கது.

”சூப்பர் எல் நினோ” தாக்கம் காரணமாக நடப்பாண்டில் தென் மேற்கு பருவமழை சரியாக பெய்யாததால் கர்நாடகத்தில் காவிரியில் கட்டப்பட்டிருக்கும் அணைகளின் நீர் இருப்பு 20 டி.எம்.சிக்கும் கீழாக குறைந்திருந்தது. எனினும், ஒரு வாரமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்திருக்கிறது. நேற்று மாலை நிலவரப்படி ஹேமாவதி அணைக்கு வினாடிக்கு 15,647 கன அடி, கபினி அணைக்கு 14,574 கன அடி, கிருஷ்ண ராஜ சாகர் அணைக்கு 12,694, ஹாரங்கி அணைக்கு வினாடிக்கு 3,665 வீதம் ஒட்டுமொத்தமாக வினாடிக்கு 46,580 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 4 அணைகளின் மொத்த நீர் இருப்பு கடந்த ஜூலை ஒன்றாம் தேதி 24.47 டி.எம்.சியாக இருந்தது. கடந்த சில நாள்களாக பெய்த மழையின் காரணமாக அணைகளுக்கு அதிக தண்ணீர் வருவதால், அணைகளின் நீர் இருப்பு 50.730 டி.எம்.சியாக உயர்ந்திருக்கிறது. கடந்த ஒரு வாரமாகவே அணைக்கு தொடர்ந்து வினாடிக்கு சுமார் 45 ஆயிரம் கன அடி முதல் 50 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் வரும் போதிலும், அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்படவே இல்லை. இன்று காலை கூட கர்நாடக அணைகளில் இருந்து வெறும் 1,234 கன அடி மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

ஜூன் மாதம் 23ம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு ஜூன் மாதம் 9.91 டி.எம்.சி, ஜூலை மாதம் 31.24 டிஎம்சி என மொத்தம் 41.15 தண்ணீர் வழங்க வேண்டும் என்று ஆணையிடப்பட்டது. ஆனால், காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆணையை கர்நாடக அரசு மதிக்காததுடன், அவ்வாறு எந்த ஆணையையும் பிறப்பிக்கவில்லை என்று பொய் கூறுகிறது. கர்நாடக அரசின் இந்த அநீதியான நிலைப்பாடு காலம் காலமாகத் தொடர்கிறது. அதனால் தான் மேகதாது அணையை கட்ட அனுமதிக்கக் கூடாது என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் ஜூன் மாதம் முதல் இன்று வரை 20 டி.எம்.சி நீரை தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் வழங்கியிருக்க வேண்டும்; இம்மாத இறுதி வரை 41.15 டி.எம்.சி நீர் வழங்கப்பட வேண்டும். ஆனால், கர்நாடகத்தில் இருந்து இதுவரை வெறும் 3 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே காவிரியில் வந்திருக்கிறது.

கர்நாடக அணைகளின் நீர்மட்டம் 50 டி.எம்.சியை தாண்டியிருப்பதாலும், வினாடிக்கு சுமார் 50 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருப்பதாலும் தமிழ்நாட்டுக்கு காவிரியில் வினாடிக்கு 24,000 கன அடி வீதம் தண்ணீர் திறப்பதில் கர்நாடக அரசுக்கு எந்த சிக்கலும் இருக்க முடியாது.

அடுத்த 20 நாள்களுக்கு இந்த அளவில் தண்ணீர் திறக்கப்பட்டால் தினமும் 2 டி.எம்.சி வீதம் இம்மாத இறுதிக்குள் 40 டி.எம்.சி தண்ணீர் கிடைத்துவிடும். அதன் மூலம் காவிரி பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடியும்.

எனவே, காவிரி மேலாண்மை ஆணையம் அறிவுறுத்திய அளவு நீர் தமிழ்நாட்டுக்கு கிடைப்பதை உறுதி செய்ய, நாளை முதல் காவிரியில் தினமும் 2 டி.எம்.சி அளவுக்கு கர்நாடகம் தண்ணீர் திறக்க வேண்டும். இதற்காக கர்நாடக அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தி சாதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று அன்புமணி கூறியுள்ளார்.

Spread the love