July 10, 2026

“மகப்பேறு வார்டில் முதல்வர் ஆய்வு செய்வதும், அதில் விளம்பரம் தேடுவதும் நல்லதல்ல” – பாலபாரதி விமர்சனம்

திண்டுக்கல்: “முதல்வர் விஜய் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையின் மகப்பேறு பிரிவிற்குள் சென்று ஆய்வு செய்தது நல்ல நடைமுறை அல்ல.” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி தெரிவித்துள்ளார்.

மேலும், “ஆய்வை ரீல்ஸாக எடுத்து விளம்பரப்படுத்துகின்றனர். இந்த அளவிற்கு ஆய்வை மலிவாக்கினால் எங்கு போய் நிற்கும் இந்த நாடு.” என்றும் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

திண்டுக்கல் தொகுதியில் மூன்று முறை தொடர்ந்து எம்எல்ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பாலபாரதி. இவர் தற்போது அக்கட்சியின் மாநில குழு உறுப்பினராக உள்ளார்.

இவர் தனது முகநூல் பதிவில், “மகப்பேறு மருத்துவ அறை குறிப்பிடத்தக்க மகளிருக்கான தனித்துவமான இடமாகும். பெண்னின் கணவரோ, தந்தையோ யாராக இருந்தாலும் உள்ளே செல்லமுடியாது.

மருத்துவர்கள், செவிலியர்கள் பெண் பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இங்கே தலைநகரில் எப்படி இப்படி? முதல்வரோ, பிரதமரோ யாராக இருந்தாலும் அந்தத் துறையின் அதிகாரிகளை சந்திக்கட்டும். என்னென்ன வளர்ச்சியோ அதெல்லாம் செய்யட்டும். ஆனால் இது நல்லநடைமுறை அல்ல.” என தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

இதற்கு ஆதரவு கருத்துகள் பல முகநூலில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து அனைத்திந்திய மாதர் சங்க கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்றுள்ள பாலபாரதி, இந்து தமிழ் திசை செய்தியாளரிடம் பேசுகையில், “மகப்பேறு வார்டுகளில் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை என்பது வழக்கம். வார்டுகளில் பிரசவத்திற்கு பின்பு பாரமரிக்க அனுமதிக்கப்பட்டுள்ள பெண்கள் உடல்ரீதியாக பல்வேறு சிரமத்தில் இருப்பர். ஒருவரை பார்க்கச் சென்றால் அருகிலுள்ளவர்கள் சிரமத்திற்கு ஆளாவார்கள்.

பெண் ஒருவர் வீடியோவை முன்னதாக அனுப்பி, சாப்பாடு சரியில்லை உள்ளிட்ட புகார்களை தெரிவிக்கிறார். அவர் துவங்கும்போது சிஎம் சார் என்று பேசத் துவங்குகிறார். இதைப்பார்த்தாலே தெரிகிறது. இது ஒரு செட்டப் தான் என்று.

அடுத்தநாளே தமிழக முதல்வர் செல்வதால் ஒரு கூட்டம் சேர்கிறது. இது முதல்வர் வந்துவிட்டார் என்பதற்கான கூட்டம் இல்லை. மருத்துவமனையில் இதற்கு முன்பு மக்கள் பிரதிநிதிகள் யாரும் ஆய்வு செய்யாமல் இல்லை. இதை ரீல்ஸாக எடுத்து விளம்பரப்படுத்துகின்றனர்.

இந்த அளவிற்கு ஆய்வை மலிவாக்கினால் எங்கு போய் நிற்கும் இந்த நாடு. பச்சிளங்குழந்தைகள், தாய்மார்கள் உள்ள வார்டுக்கு செல்லாமல் அதிகாரிகள் அறையில் இருந்து தமிழக முதல்வர் விசாரித்திருக்கலாம். எல்லாவற்றையும் உடைக்கலாம் என்றால் எதுவும் நிற்காது. எனக்கு மனதில் சரி என பட்டதை பதிவாக போட்டேன்,” என்றார்.

Spread the love