மதுரை: கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கும் விழா கரூரில் இன்று நடைபெறுகிறது. இதில் தமிழக முதல்வர் விஜய் பங்கேற்று அரசு பணி நியமன ஆணைகளை வழங்குகிறார். இதற்கு தடை கோரி நாம் தமிழர் கட்சி தீரன் திருமுருகன் மற்றும் வழக்கறிஞர் சீனி அகமது ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர்.
மனுவில்,கரூர் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையை உச்ச நீதிமன்றம் நியமித்த குழு கண்காணித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவது விசாரணையை பாதிக்கச் செய்யும். இது கரூர் சம்பவத்தின் சாட்சிகளை கலைக்கும் நடவடிக்கையாகும்.
போட்டித் தேர்வு, தகுதி அடிப்படையில் தான் அரசுப் பணி வழங்கப்பட வேண்டும். அதை விடுத்து ஒரு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கினால், இதுபோன்ற சம்பவங்களில் உயிரிழப்பவர்களும் அரசு வேலை கேட்கும் நிலை ஏற்படும்.
தமிழகத்தில் பல்வேறு சம்பவங்களில் மக்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படவில்லை. இதனால் கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்குவது தவறான முன்னூதரணத்தை ஏற்படுத்தும். எனவே சிபிஐ விசாரணை, உச்ச நீதிமன்ற விசாரணை முடியும் வரை அரசு வேலை வழங்க தடை விதித்து உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதிகள் கார்த்திக்கேயன், சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், இறந்து போனவர்கள் குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளது வேலை வழங்குவதால் என்ன தவறு. பொருளாதர உதவி தேவை தானே? என்றனர்.
அரசுத் தரப்பில், “வழக்கு சிபிஐ விசாரணையில் உள்ளது. உச்ச நீதிமன்றம் விசாரணை கண்காணித்து வருகிறது. இன்று மாலை பணி நியமனம் வழங்கவுள்ள நிலையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர் தரப்பில், “ஏற்கெனவே கும்பகோணம் மகாமகம் சம்பவம், ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு, தருமபுரி பஸ் எரிப்பு சம்பவம் நிகழ்வுகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கவில்லை. கருணை அடிப்படை பணிக்கான விதிகளை பின்பற்ற வேண்டும் அல்லது புதிய விதிகளை உருவாக்க வேண்டும்” எனக் கூறப்பட்டது.
அப்போது நீதிபதிகள், “அரசுப் பணி வழங்குவது குறித்து சட்டசபையில் அறிவித்து உள்ளீர்களா?” எனக் கேட்டனர்.
மனுதாரர் தரப்பில், “உயிரிழந்த நபர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கப்பட்டது.தற்போதைய அரசு அரசுப்பணி வழங்கப்படுகிறது” எனக் கூறப்பட்டது.
நீதிபதிகள், “இது அரசியல் மேடை அல்ல” என்றனர்.
மனுதாரர் தரப்பில், “கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு கருணை அடிப்படையிலான பணியை வழங்க திட்டமிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட இது போன்ற வழக்கு திரும்பப் பெறப்பட்டுள்ளது.கருணைப்பணி வழங்குவது விதிகளுக்கு எதிரானது” என வாதிடப்பட்டது.
அரசுத்தரப்பில், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு அரசுப்பணி வழங்கப்பட்டுள்ளது” எனக் கூறப்பட்டது.
பின்னர் நீதிபதிகள்,அரசின் கொள்கை தொடர்பான முடிவில் தலையிட விரும்பவில்லை.
இன்று நிகழ்வு நடைபெறலாம்.ஆனால் தற்காலிக பணி வழங்க வேண்டும். டி என் பி எஸ் சி வழக்கில் சேர்க்கப்படுகிறது. வேலை பெற்றவர்களுக்கு முதல் மாத சம்பளம் வழங்குவது தொடர்பாக ஜூலை 21ல் முடிவு செய்யப்படும். விசாரணை ஜூலை 21க்கு தள்ளிவைக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.

More Stories
ராமேசுவரம் அருகே பிரப்பன்வலசையில் திறப்பு விழாவுக்கு தயாராகும் ஒலிம்பிக் நீர் விளையாட்டு மையம்
வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 16-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
பழநி முருகன் கோயிலுக்கு கடந்த 6 ஆண்டுகளில் ரூ.1,414 கோடி வருவாய்!