ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே பிரப்பன்வலசையில் ரூ.42.90 கோடி மதிப்பீட்டில் ஒலிம்பிக் நீர் விளையாட்டு மையம் கட்டி முடிக்கப்பட்டு, திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது.
தமிழ்நாட்டில் 1,076 கி.மீ நீளத்துக்கு கடற்கரை அமைந்துள்ளது. அதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் அதிகபட்சமாக தெற்கே மன்னார் வளைகுடா, வடக்கே பாக் நீரிணை என 237 கி.மீ நீளத்துக்கு இரண்டு கடல்கள் அமைந்துள்ளது.
இதில் தனுஷ்கோடி, ராமேசுவரம் பாம்பன், பிரப்பன்வலசை ஆகிய கடற்கரை பகுதிகளில் அலைச்சறுக்கு, நீச்சல், துடுப்பு படகு, பெடல் படகு, உள்ளிட்ட பல்வேறு நீர் விளையாட்டுகளுக்கு ஏற்ற இடங்களாக உள்ளன. இந்த இடங்களில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து நீர் விளையாட்டு வீரர்களுக்கு அழைப்பு விடுத்து தனியார் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் நீர் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும் தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னார் வரையிலான இந்திய-இலங்கை இரு நாடுகளுக்கு இடையேயான பாக் நீரிணை பகுதியை ஆண்டு தோறும் நீச்சல் வீரர், வீராங்கணைகள் தனியாகவோ குழுவாகவோ ரிலே மற்றும் மராத்தான் முறையிலும் நீந்தி கடக்க ஆண்டு தோறும் வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 2024 பிப்ரவரி மாதம் தமிழக சட்டப்பேரவையின் அப்போதைய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒலிம்பிக் நீர் விளையாட்டு மையம் அமைக்கப்படும், என அறிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம் அருகே பிரப்பன்வலசை கடற்கரையில் நீர் விளையாட்டு வல்லுநர்கள் மூலம் கடல் நீரின் தரம், தண்ணீரின் ஓட்டம், காற்றின் தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டு, 7 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இங்கு ஒலிம்பிக் நீர் விளையாட்டு மையம் அமைக்க தமிழக அரசு ரூ.42.90 நிதி ஒதுக்கீடு செய்தது.
இந்த ஒலிம்பிக் நீர் விளையாட்டு மையத்தில், தங்குமிட வசதி (ஹாஸ்டல்), ஜிம், வாட்டர் ஸ்போர்ஸ் சென்டர், செயில் போட் பார்க்கிங் (sail boat parking), யோகா அறை, போட் ஹாங்கர், திறந்தவெளி ஓய்விடம், வேர்ல்டு கிளாஸ் டிரையினிங் கம் கோச்சிங் அகாடமியும் அமைக்கப்பட்டு உள்ளன.
மேலும், இந்த அகாடமியில் செயிலிங், கேனோயிங், சர்ப்பிங், கயாக்கிங் மற்றும் ஸ்டாண்ர்டப் பேடில் போன்ற விளையாட்டுகளுக்கு உலகத் தரம் வாய்ந்த பயிற்சிகள் வழங்கப்படும்.
உலகத்தரம் வாய்ந்த போட்டிகளை நடத்துவது மட்டுமின்றி, பயிற்சி பெறுவதற்காக ஏராளமான வெளிநாட்டு விளையாட்டு வீரர்களும் இங்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, பிரப்பன்வலசையில் ஒலிம்பிக் நீர் விளையாட்டு மையம் கட்டி முடிக்கப்பட்டு, திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது. விரைவில் தமிழக முதல்வர் விஜய் திறந்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More Stories
கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்க தடை இல்லை: உயர் நீதிமன்றம்
வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 16-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
பழநி முருகன் கோயிலுக்கு கடந்த 6 ஆண்டுகளில் ரூ.1,414 கோடி வருவாய்!