பெய்ஜிங்: விண்வெளி ஆராய்ச்சிக்கான செலவுகளைக் குறைக்க, விண்ணில் ஏவப்படும் ராக்கெட்டுகளை மீண்டும் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை உலக நாடுகள் தீவிரமாக உருவாக்கி வருகின்றன.
அமெரிக்காவின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் தனது ‘பால்கன் 9’ ராக்கெட்டுகளைக் கடலில் உள்ள தரை தளத்தில் செங்குத்தாகத் தரையிறக்கி சாதனை படைத்துள்ளது. ஆனால், சீனா தரைத்தளத்திற்குப் பதிலாக, அதிநவீன வலைபோன்ற அமைப்பைப் பயன்படுத்தி கடலில் ராக்கெட்டைப் பிடித்து புதிய விண்வெளிப் போட்டியைத் தொடங்கியுள்ளது.
சீன விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, “ஹாய்னான் வணிக விண்வெளி ஏவுதளத்திலிருந்து ‘லாங் மார்ச்-10ஏ’ என்ற ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ராக்கெட் ஏவப்பட்ட ஆறு நிமிடங்களில், அதன் முதல் மற்றும் இரண்டாம் பகுதிகள் தனித்தனியாகப் பிரிந்தன.
அதைத் தொடர்ந்து, பூமியை நோக்கி வந்த ராக்கெட்டின் முதல் பகுதி பூஸ்டர், கட்டுப்பாட்டுடன் செங்குத்தாகக் கீழ்நோக்கி இறங்கி, பிறகு கடலில் நிறுத்தப்பட்டிருந்த மீட்புத் தளத்தில் இருந்த வலையமைப்பிற்குள் மிக துல்லியமாக இறங்கியதை தொடர்ந்து பத்திரமாக மீட்கப்பட்டது.
வழக்கமான ராக்கெட்டுகள் விண்வெளியில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்திய பின், கடலில் விழுந்து அழிந்துவிடும் அல்லது விண்வெளிக் குப்பையாக மாறிவிடும்.ஆனால்,மீண்டும் பயன்படுத்தக்கூடிய இந்த பூஸ்டர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, சிறிய பழுதுபார்ப்புகளுக்குப் பின் அடுத்தடுத்த விண்வெளித் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும். இதனால் செலவு குறையும்” என்று கூறப்பட்டுள்ளது.

More Stories
“என்னை கொல்ல முயற்சித்தால் ஈரானை நோக்கி ஆயிரம் ஏவுகணைகள் பாயும்” – ட்ரம்ப்
பேச்சுவார்த்தை கோரிய ஈரான்: அமெரிக்கா ஏற்பு என ட்ரம்ப் அறிவிப்பு
நியூசிலாந்து சென்ற பிரதமர் மோடியை விமான நிலையத்தில் ஆரத்தழுவி வரவேற்ற பிரதமர் லக்சன்