சென்னை: லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி-யாக பணியாற்றிய அபய் குமார் சிங் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார். தமிழக காவல்துறையில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி-யாக பணியாற்றிய அபய் குமார் சிங், நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார்.
பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த இவர், 1992-ம் ஆண்டு ஐபிஎஸ் ஆக (தமிழக பிரிவு) தேர்வானவர். தூத்துக்குடி சப்-டிவிசனில் ஏஎஸ்பி-யாக பணியை தொடங்கிய அபய் குமார் சிங், பின்னர் மணியாச்சி சப்-டிவிசனில் பணியாற்றினார்.
காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம், விழுப்புரம், தூத்துக்குடி, மதுரை மாவட்ட எஸ்.பி.யாகவும், ராமநாதபுரம் சரக டிஐஜியாகவும் பணியாற்றினார். பின்னர், ஐஜி-யாக பதவி உயர்வு பெற்று திருநெல்வேலி காவல் ஆணையர், சென்னை கூடுதல் ஆணையர் (க்ரைம்), தென்மண்டல ஐஜி, சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையராக பதவி வகித்தார்.
அதைத் தொடர்ந்து கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு பெற்று தலைமை விஜிலென்ஸ், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, ஆயுதப்படை, சிபிசிஐடி பிரிவிலும் பணியாற்றினார்.
அதன்பின், டிஜிபியாக பதவி உயர்வு பெற்று லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பணியாற்றினார். சிறப்பாக பணியாற்றியதற்காக 2008 மற்றும் 2020-ல் மாநில மற்றும் மத்திய அரசு பதக்கங்களையும் பெற்றுள்ளார்.
அபய் குமார் சிங், சில தினங்கள் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாகவும் பணியாற்றினார். இவருக்கான பணி ஓய்வு உபச்சார விழா எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.
தீயணைப்புத்துறை இயக்குநர் சீமா அகர்வால், பொறுப்பு டிஜிபி வெங்கடராமன், சென்னை காவல் ஆணையர் அருண் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் நினைவுப் பரிவு வழங்கி பாராட்டினர்.

More Stories
தமிழகத்தில் பிப்.10 வரை வறண்ட வானிலை; சில மாவட்டங்களில் பனிமூட்டம்
தமிழகம் வரும் பிரதமர் அறுபடை வீடுகளையும் சுற்றிப் பார்க்க வேண்டும்: அமைச்சர் சேகர்பாபு
‘குடமுழுக்கில் யாருக்கும் முதல் மரியாதை இல்லை’ – உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு