July 15, 2026

டெட்: தகுதியானதா ‘தகுதித் தேர்வு’?

தேசிய அளவிலான கால்பந்துப் போட்டி. மாநில அணிக்கு ஒரு முன்கள வீரர் தேவை. நான், நீ என்று ஆயிரம் வீரர்கள் ஓர் இடத்துக்காகப் போட்டியிடுகின்றனர். அணி மேலாளர், சிறு தேர்வு வைத்து அதில் அதிக மதிப்பெண் பெற்றவருக்கே மாநில அணியில் இடம் என்கிறார்.

பிறகு அணி மேலாளர் ஒரு முன்கள வீரரைத் தேர்ந்தெடுத்தார். பல போட்டிகளில் அந்த வீரர் தனது திறமையைப் பயன்படுத்தி அதிக கோல்களை ஈட்டினார். ஆண்டுகள் கழிந்தன. புதிய மேலாளர் வந்தார்.

தமது அணி வீரர்களின் திறனைப் பரிசோதிக்க முன்கள வீரரை அழைத்தார். தேசிய அளவிலான போட்டியில் சிறப்பாக விளையாடினால் அணியில் தொடரலாம். இல்லையெனில் வெளியேறலாம் என்றார் கண்டிப்புடன்.

“ஆனால், போட்டியில் நீங்கள் கோல்கீப்பராக விளையாடித் திறமையை நிரூபிக்க வேண்டும்” என்றார் மேலாளர். முன்கள வீரருக்கு அதிர்ச்சி. “எல்லா நிலைகளிலும் எனக்கு விளையாடத் தெரியும். அதுதான் குழு விளையாட்டுக்கான விதி.

முன்களத்தில் நின்று விளையாடுவது எனது சிறப்புத் தகுதி. நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், ஒவ்வொரு நிலையிலும் சிறிது நேரம் விளையாடிக் காட்டுகிறேன்.

ஆனால், எனக்குச் சற்றும் சம்பந்தமே இல்லாத நிலையில் விளையாடி வென்றால்தான் நான் தகுதியானவர் எனச் சொல்வது எப்படி நியாயமாகும்?” என்று கேட்டார் வீரர்.

இதைத்தான் நுழைவுத்தேர்வுகளும் போட்டித் தேர்வுகளும் செய்கின்றன. நம் நாட்டில் மக்கள் தொகை அதிகம். படித்தவர்கள் அதிகரிக்கும் அளவுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கவில்லை. அதனால் தேர்வுகள் மூலம் குழப்பி வடிகட்டிவிட்டு, தகுதியுள்ளவருக்கே வாய்ப்பு எனத் தப்பிக்க முடிகிறது. இதில் தகுதித் தேர்வு முறையில் கூடுதல் பிரச்சினைகள் உள்ளன.

சிடுக்கான சிக்கல்கள்

பல காலமாக, அந்தந்த ஆண்டுகளின் நடைமுறைக்கு ஏற்ப ஆசிரியப்பணி வாய்ப்புகள் வழங்கப்பட்டன. அதன் பின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு, டிஆர்பி போட்டித்தேர்வு முறை வந்தது.

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 வந்ததும் இடைநிலை வரை போட்டித்தேர்வின் பெயர் ‘டெட்’ (ஆசிரியர் தகுதித் தேர்வு) என மாற்றப்பட்டது. இப்போதுள்ள பத்தாம் வகுப்பு வரையான புத்தகங்களை வரிக்கு வரி மனப்பாடம் செய்தால்தான் டெட் தேர்வில் தேர்ச்சியடைய முடியும்.

சில ஆண்டுகளில் புத்தகங்கள் மாறிய பிறகு புதிய புத்தகத்தைப் படித்துத் தேர்வு எழுதினால்தான், ஆசிரியருக் கான தகுதி வரும் என எப்படிச் சொல்ல முடியும்? தொடக்கப் பள்ளியில் ஓர் ஆசிரியர் அனைத்துப் பாடங்களையும் நடத்துவதால், அனைத்திலும் கேள்விகளைக் கேட்கப்படலாம். அவர்களுக்கு எட்டாம் வகுப்புவரை உள்ள பாடநூலில் இருந்து கேள்விகள் எதற்கு? நடுநிலை வகுப்புகளில் ஒவ்வொரு பாடத்துக்கும், அதற்கான தனி ஆசிரியர்கள் இருக்கி றார்கள்.

அவர்களின் பாடத்தில்தானே அதிகமதிப்பெண்களுக்குக் கேள்விகள் இடம்பெற வேண்டும்? கால்பந்தாட்டம் போல அவரவர் நிலைக்கேற்ற திறன்களையும் பிறவற்றில் அடிப்படைகளையும் ஆசிரியர் தெரிந்து வைத்திருந்தால் போதுமே! அனைத்துப் பாட ஆசிரியர்களுக்கும் அறிவியல் அல்லது சமூக அறிவியலில் மட்டும் 60 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்படுவது எப்படிச் சரியாகும்?

ஒரு நிமிடத்தில் வாசித்துப் புரிந்துகொள்ளவே முடியாத அளவுக்குக் குழப்பமான கேள்விகள் கேட்கப்படுவது ஏன்? தகவல்களை வெற்று மனப்பாடம் செய்வதுதான், தொடர்ந்து ஆசிரியராக வேலை செய்யத் தகுதியா? இது குறித்து விரிவாக விவாதிக்கப்பட வேண்டும்.

ஆசிரியர் பயிற்சி முறை, பணி அழுத்தங்கள், மாணவரின் நடத்தை மாற்றங்கள், காலத்துக்கு ஏற்ற கல்விமுறை போன்று கல்வியில் ஏராளமான மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக் கிறது. அவைதான் அரசுப் பள்ளிகளையும் அடுத்த தலைமுறையையும் காக்கும் வழிகள்.

தீர்வுகள்

போட்டித் தேர்வு வேறு. தகுதித் தேர்வு வேறு. தகுதித்தேர்வு என்பதைச் சட்டப்படி பணியில் உள்ள ஐம்பத்தைந்து வயதுவரையிலான ஆசிரியர்கள் எழுத வேண்டும். அதற்குக் கொள்குறி வினாக்கள் மூலம் தகவல் களைக் கேட்கும் தேர்வு முறையானதே அல்ல.

அவரவர் பாடத்தில் இருந்தும் வகுப்பறை மேலாண்மையில் இருந்தும் வினாக்களுக்கு அவரவர் அனுபவத்தில் இருந்தும் விரிவாக விடை எழுதும்படித் தகுதித் தேர்வை மாநில அரசு மாற்றியமைக்க வேண்டும். உதாரணமாக,

* வகுப்பில் உட்காராமல் சுற்றிக்கொண்டே இருக்கும் மாணவரை எப்படிக் கையாளுவீர்கள்?

* வாசிக்கச் சிரமப்படும் குழந்தைகளை எப்படி வாசிக்க வைப்பீர்கள்?

* எழுத்துத் திறனை வளர்க்க என்ன செயல்பாடுகளைச் செய்யலாம்?

* மற்றவர்களை கேலி கிண்டல் செய்யும் ஒரு மாணவரை எப்படி நெறிப்படுத்தலாம்?

* ஒரு வகுப்பில் உள்ள சிறப்புக்குழந்தையிடம், மற்ற மாணவர்கள் பழகும் முறைகளைக் கூறுக.

* அடித்தால்தான் குழந்தைகளைத் திருத்த முடியும் என வாதம் செய்பவரிடம், உங்கள் கருத்துகளை எடுத்துக்கூறுங்கள்.

* சைகை மொழி, ஓவிய மொழி பற்றிய பாடத்தை மாணவர் பங்கேற்றுப் புரிந்துகொள்ள ஏற்ற செயல்பாடுகளை உருவாக்குங்கள்.

* பாடக்குறிப்பு தேவை, தேவையில்லை என விவாதம் நடைபெறுகிறது. ஏதேனும் ஒரு பக்கம் நின்று உங்கள் விவாதங்களை எழுதுங்கள்.

* பாடநூல், பாடத்திறன்களை வளர்க்க உதவியாக இருக்கிறதா? ஆய்வுரை எழுதுக.

* பொதுப் பள்ளி, அருகமைப் பள்ளி ஆகியவற்றை ஏன் நடைமுறைப்படுத்த இயலவில்லை?

இப்படியான கேள்விகள் தானே தகுதித்தேர்வில் இடம்பெற வேண்டும்.

Spread the love