சென்னை: விஜய்யின் ஆட்சியை கவிழ்க்க மேலும் ஒரு எம்எல்ஏவை இழுக்க முயற்சி நடைபெற்றதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம், கட்சியிலிருந்து விலகி ஆட்சியைக் கவிழ்க்க ஒத்துழைக்க ரூ.35 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக அவர் அளித்த புகாரின் பேரில், சென்னை திருவல்லிக்கேணி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் உட்பட 11 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருந்த நிலையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த கணேசன் (41) 12-வது நபராக கைது செய்யப்பட்டார்.
விசாரணையில், பேரவைத் தலைவர் தொடர்பான தீர்மானத்தின்போது, உசிலம்பட்டி தொகுதியைச் சேர்ந்த தவெக எம்எல்ஏவை எதிராக வாக்களிக்க வைக்க, அவருக்கு நெருக்கமான நபர் மூலம் பேரம் பேச முயற்சி நடைபெற்றதாக கணேசன் வாக்குமூலம் அளித்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியுள்ள நிலையில், செந்தில் பாலாஜி திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
அதில், தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசியதாக பதியப்பட்ட வழக்கில் என் பெயரும், சகோதரர் பெயரும் இல்லை. அப்படி இருக்கையில் எங்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது ஏன்? இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதில் அளிப்பது குறித்து போலீஸார் ஆலோசித்து வருகின்றனர்.

More Stories
”ஊழலில் ஈடுபட்டால் பதவி பறிக்கப்படும்” – அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் விஜய் எச்சரிக்கை!
ஒரு உள்ளாட்சி எல்லையில் வசிப்பவர்கள் மற்றொரு உள்ளாட்சி மயானத்தை பயன்படுத்த முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னையில் போக்சோ வழக்கில் கைதானவர் தப்பியோட்டம்