கும்பகோணம்: டெல்டா மாவட்டங்களில் 3.50 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் நிலத்தடி நீர்மட்டம் சரிவு, குறைந்த அழுத்த மின்சாரம் காரணமாக பம்புசெட் மூலம் தேவையான அளவு நீர்ப்பாய்ச்ச முடியாததால் நெற்பயிர்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.
எனவே மேட்டூரில் இருந்து ஜூலை 20-ம் தேதி முதல் 10 நாட்களுக்கு நீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையில் நீர் திறப்பதை கணக்கில் கொண்டு குறுவை சாகுபடி மேற்கொள்வது வழக்கம்.
ஆனால், நிகழாண்டு மேட்டூர் அணையில் போதிய நீர் இல்லாததால் ஜூன் 12-ம் தேதி நீர் திறக்கவில்லை. எனினும், விவசாயிகள் மின்மோட்டார் பம்புசெட் மூலம் நீர் இறைத்து குறுவை சாகுபடியை தொடங்கினர்.
இந்நிலையில், நடவு செய்து 20 நாட்கள் ஆனநிலையில் தூர்பிடித்து, வளரும் பருவத்தில் நெற்பயிருக்கு நீர் விட வேண்டும். ஆனால், நிலத்தடி நீர்மட்டம் குறைவு, குறைந்தளவு மின் அழுத்தம் காரணமாக பம்பு செட்டை இயக்க முடியாததால் வயல்களுக்கு நீர்பாய்ச்ச முடியவில்லை.
இதனால், நடவு செய்த நெற்பயிர்கள் நீரின்றி காய்ந்து வருகின்றன. உடனடியாக தண்ணீர் பாய்ச்சாவிட்டால், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் சாகுபடி செய்துள்ள அனைத்து குறுவை நெற்பயிரும் கருகிவிடும்.
இதனால், விவசாயிகளுக்கு பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, தமிழக அரசு, மேட்டூர் அணையில் இருந்து கடைமடை வரை செல்லும் வகையில் 10 நாட்கள் கட்டாயமாக நீர்திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுதொடர்பாக, முன்னோடி விவசாயி கணபதியக்ரஹாரம் சீனிவாசன் கூறியது: குறுவை சாகுபடிக்கு ஜூன் 12-ம் தேதி நீர் திறந்து விடுவதை கணக்கிட்டு குறுவை நடவை தொடங்குவோம்.
நிகழாண்டு ஆறுகளில் தண்ணீர் வராததால், மின்மோட்டார் பம்புசெட் மூலம் நீர் இறைத்து சாகுபடி மேற்கொண்டோம். ஆனால், அண்மைக்காலமாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டது.
மேலும், மும்முனை மின்சாரம் வழங்கும் நேரமும் குறைக்கப்பட்டுவிட்டதுடன் குறைந்த அழுத்த மின்சாரம் காரணமாக மின்மோட்டாரை சரிவர இயக்க முடிவதில்லை.
இதனால், வயல்களுக்கு நீர்பாய்ச்ச முடியாததால், வயல்கள் காய்ந்து பாலம் பாலமாக வெடித்து வருகின்றன. தற்போது வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டதாலும் மின்மோட்டார் மூலம் இறைக்கும் நீரை 1 ஏக்கருக்கு 3 மணிநேரம் விடுவதற்கு பதிலாக 10 மணிநேரம் தண்ணீர் விட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக அனைத்து வயல்களுக்கும் பம்புசெட் மூலம் நீர் பாய்ச்ச முடிவதில்லை. இதனால், தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி செய்துள்ள 1.50 லட்சம் ஏக்கர் உட்பட ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் 3.50 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள குறுவை பயிர்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.
எனவே, தமிழக அரசு, ஆக. 3-ம் தேதி ஆடி 18 பெருக்கு விழா கொண்டாடப்படுவதை கருத்தில் கொண்டு மேட்டூர் அணையில் இருந்து ஜூலை 20-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை 10 நாட்கள் கடைமடை வரை செல்லும் வகையில் கட்டாயம் நீர் திறந்து விட வேண்டும். அப்போதுதான், டெல்டா பகுதிகளில் நீர்மட்டம் உயரும். குறுவை நெற்பயிரையும் காப்பாற்றும் வாய்ப்புள்ளது என்றார்.

More Stories
“சோனம் வாங்சுக் உடன் மத்திய அரசு உடனே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” – சீமான்
குதிரை பேரம் விவகாரம்: டிஜிபியிடம் புகார் மனு அளித்த அதிமுக நிர்வாகிகள் கூறியது என்ன?
சோனம் வாங்சுக் போராட்டத்துக்கு தவாக முழு ஆதரவு: வேல்முருகன்