தைப்பூசத்தை முன்னிட்டு, முருகனின் அறுபடை வீடுகளில், 5-ம் படை வீடான திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர். (உள்படம்) காவடி மண்டபத்தில் எழுந்தருளிய உற்சவர் சண்முகர்.
திருவள்ளூர்: தைப்பூசத்தை முன்னிட்டு, திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு, நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில், முருகனின் அறுபடை வீடுகளில், 5-ம் படை வீடாக விளங்குகிறது.
இக்கோயிலில், தைப்பூசத்தை முன்னிட்டு, நேற்று அதிகாலை 3 மணியளவில், மூலவரான சுப்பிரமணிய சுவாமிக்கு, பால், பன்னீர், தேன் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து, சுப்பிரமணிய சுவாமிக்கு வெண்ணிற பட்டு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அதேபோல், காலை 9 மணியளவில் காவடி மண்டபத்தில் உற்சவர் சண்முகருக்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. பிறகு, மாலை குதிரை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி பிரகார உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தைப்பூசத்தை முன்னிட்டு, நேற்று அதிகாலை 3 மணி முதல் நேற்று இரவு வரை, திருவள்ளூர், அரக்கோணம் உள்ளிட்ட தமிழக பகுதிகள் மட்டுமல்லாமல், ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட பிற மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திரண்டு, நீண்ட வரிசையில் 5 மணி நேரத்துக்கு மேல் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
Read More
இதில், சென்னை, காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதை யாத்திரையாக திருத்தணிக்கு வந்து, சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்தனர். மேலும், நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, மலர் காவடி, மயில் காவடி உள்ளிட்ட காவடிகளை சுமந்து வந்து, சுப்பிரமணிய சுவாமியை வணங்கினர்.
இலவச பேருந்துகள் இயக்கம்: வழக்கத்தைவிட மிக அதிகளவில் பக்தர்கள் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திரண்டதால், கோயிலுக்கு செல்லும் மலை பாதையில் கார், வேன், இரு சக்கர வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அதே நேரத்தில், பக்தர்கள் மலை பாதை வழியாக எளிதாக கோயிலுக்கு செல்லும் வகையில், கோயில் நிர்வாகம் சார்பில் 15 இலவச பேருந்துகள் இயக்கப்பட்டன.
தைப்பூசத்தை முன்னிட்டு, திருத்தணியில், சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளிட்ட பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பக்தர்களின் வசதிக்காக அரக்கோணத்திலிருந்து, திருத்தணிக்கு நேற்று சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

More Stories
சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த வியாசர்பாடி இரவீஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ விழா: ஜூன் 13-ம் தேதி கொடியேற்றம்
ஸ்ரீ முருகன் வைகாசி விசாக விழாக் குழுவினர் நடத்திய54 ஆம் ஆண்டு வைகாசி விசாக உத்சவ விழா