July 21, 2026

‘போதையில்லா கரூர்’ விழிப்புணர்வு மாரத்தான்: திருச்சி மத்திய மண்டல ஐஜி தொடங்கி வைத்து பங்கேற்பு

கரூர்: “ஒழுக்கம் என்பது மைதானத்தில் இருந்தே தொடங்குகிறது” என ‘போதையில்லா கரூர்’ விழிப்புணர்வு மாரத்தானை தொடங்கி வைத்த திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

கரூர் மாவட்ட காவல்துறை சார்பில், “லெட் மேக் கரூர்- ட்ரக் ப்ரீ 2026” (போதையில்லா கரூர்) என்ற விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று (ஜூலை 21) காலை 6 மணிக்கு நடைபெற்றது. இதனை திருச்சி மத்திய மண்டல ஐஜி வி.பாலகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் கரூர் எஸ்.பி. டி.என்.ஹரிகிரண் பிரசாத் முன்னிலை வகித்தார்.

ஐஜி பாலகிருஷ்ணன், எஸ்பி ஹரிகிரண் பிரசாத் ஆகிய இருவரும் மாரத்தானில் பங்கேற்று 5 கி.மீட்டர் தூரம் ஓடினர். கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தொடங்கிய மாரத்தான் ஓட்டம் வெங்கக்கல்பட்டி ரவுண்டானா வழியாக சென்று கரூர் ஆயுதப்படை வளாகத்தில் நிறைவு பெற்றது. இதில் காவல்துறையினர், ஊர்க்காவல் படையினர், என்சிசி மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஓட்டப் பயிற்சியாளர்கள் மேற்கொள்ள வேண்டிய உடற்பயிற்சிகளை ஐஜி பாலகிருஷ்ணன் ஆயுதப்படை மைதானத்தில் செய்துகாட்ட ஓட்டத்தில் பங்கேற்றவர்கள் அனைவரும் அவற்றை பின்பற்றி பயிற்சி செய்தனர். இதில் காவல்துறையினர், ஊர்க்காவல் படையினர், என்சிசி மாணவர்கள் பங்கேற்றனர்.

தொடர்ந்து ஐ.ஜி பாலகிருஷ்ணன் தலைமையில் ஒர் அணி, எஸ்.பி ஹரிகிரண் பிரசாத் தலைமையில் ஒர் அணி என இரு குழுக்களாக பிரிந்து கயிறு இழுக்கும் போட்டி நடைபெற்றது. இதில் ஐஜி பாலகிருஷ்ணன் தலைமையிலான அணியினர் வெற்றி பெற்றனர். தொடர்ந்து பெண்களுக்கான கயிறு இழுத்தல் போட்டி நடைபெற்றது.

கரூர் மாவட்டத்தில் கடந்த ஒன்றரை மாதங்களாக காவல் துறையினருக்கான கிரிக்கெட், கைப்பந்து, ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இவற்றில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பதக்கம், கோப்பை ஆகியவற்றை ஐஜி பாலகிருஷ்ணன் வழங்கினார்.

முன்னதாக ஐஜி பாலகிருஷ்ணன் பேசுகையில், “காவல் துறையில் ஒழுக்கம் முக்கியம். அது மைதானத்தில் இருந்து தான் தொடங்கும். மனசு சொல்வதை தான் உடல் கேட்கும். விளையாட்டுகளில் ஈடுபடுங்கள். உடலை உறுதியாக வைத்துக் கொள்ளுங்கள். தவறான போதை பழக்கங்களுக்கு அடிமையாகக்கூடாது.

உடல் நலன் மீது கவனம் செலுத்த வேண்டும். நாம் ஆரோக்கியமாக இருந்தால் தான் நம் குடும்பத்தை கவனிக்க முடியும். நீங்கள் குடும்பத்தை நன்றாக வைத்துக் கொண்டால் தான் நீங்கள் உங்கள் பணியை சரியாக செய்ய முடியும்” என்றார். இந்நிகழ்வில் ஏடிஎஸ்பி பிரபாகரன், ஜெயசந்திரன், டிஎஸ்பி வெங்கடாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Spread the love