திருப்போரூர்: செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்தில் தண்டரை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து ஒரகடம் வழியாக பல்வேறு கிராம மக்கள் குண்ணப்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் ஜப்பான் சிட்டி தொழிற்பேட்டைக்கு செல்கின்றனர். அதுமட்டுமின்றி தண்டரை சாலையில் உள்ள தனியார் பொறியியல், மருத்துவக் கல்லூரிக்கும் முக்கிய சாலையாக இச்சாலை உள்ளது.
கிராமப்புறங்களில் விளைவிக்கப்படும் வேளாண் பொருட்களை திருக்கழுக்குன்றம், மானாம்பதி, திருப்போரூர் ஆகிய இடங்களுக்கு எடுத்துச் செல்ல இச்சாலை முக்கிய பயண வழிப்பாதையாக பயன்பட்டு வருகிறது. மேலும், ஒரகடம், சின்ன விப்பேடு, திருநிலை, அருங்குன்றம், மானாம்பதி, குண்ணப்பட்டு கிராம மக்கள் செங்கல்பட்டு செல்ல மாற்றுப்பாதையாக இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில வருடங்களாக போதிய பராமரிப்பின்றி இருந்ததால் கடந்த நவம்பர் மாதம் பெய்த மழையின் காரணமாக சாலையின் பல இடங்களில் தார் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதையடுத்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய சாலை அமைக்கும் பணிகள் தொடங்கின. ஆனால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டதால் சாலையெங்கும் ஜல்லிக்கற்கள் சிதறி அந்த சாலையில் யாரும் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சாலைப்பணியை விரைந்து முடிக்குமாறு ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து தற்போது ஜல்லிக்கற்கள் சீரமைக்கப்பட்டு தார் ஊற்றி புதிய சாலை அமைக்கப்பட்டது. இதுகுறித்த செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும் பணியை நிறைவு செய்ய உத்தரவிட்ட மாவட்ட நிர்வாகத்திற்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

More Stories
“விழுப்புரம் மாவட்ட காவல் துறைக்கு தனி அதிகாரமா?” – பெ.சண்முகம் காட்டம்
தொடரும் காவல் மரணங்கள்; முதல்வர் வாய் திறப்பது எப்போது? – மு.க.ஸ்டாலின்
அமைச்சர்கள் மோதலால் அதிகாரிகள் அப்செட்”