July 30, 2026

குற்றால அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை!

தென்காசி: குற்றால அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் காலமாகும். அப்போது இங்குள்ள குற்றால மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில் ஆர்ப்பரித்து வரும் தண்ணீரில் குளிப்பதற்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை புரிந்து அருவியில் குளித்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில், இந்த ஆண்டு சீசன் முன்கூட்டியே தொடங்கியதை அடுத்து அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்து சென்றனர். மேலும் அவ்வப்போது வெயிலின் தாக்கம் அதிகரித்ததன் காரணமாக அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து குறைவாகக் காணப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்த நிலையில், நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பிரதான அருவியான குற்றால மெயின் அருவி மற்றும் ஐந்தருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அருவிக்கரையில் ஓரமாக நின்று செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். மேலும் அருவிக்கரையில் அருகில் சென்று ஆனந்தமாக குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் காத்திருக்கின்றனர். இருப்பினும் பழைய குற்றால அருவி மற்றும் புலியருவிகளில் தற்போது சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.

Spread the love