February 7, 2026

“இந்தியாவின் வளர்ச்சிக்கு இதுவே ஆதாரம்!” – எலான் மஸ்க் பதிவை சுட்டிக் காட்டி அமைச்சர் நிர்மலா பெருமிதம்

‘பொருளாதார பலத்தில் அமெரிக்காவை முந்தியது இந்தியா’

புதுடெல்லி: பொருளா​தார பலத்​தில் அமெரிக்​காவை இந்​தியா முந்​தி​யிருக்​கிறது என்று தொழில​திபர் எலான் மஸ்க் குறிப்​பிட்​டுள்​ளார். இதுவே இந்​தி​யா​வின் வளர்ச்​சிக்கு ஆதா​ரம் என்று மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் தெரி​வித்​துள்​ளார்.

உலகளா​விய மொத்த உள்​நாட்டு உற்​பத்தி (ஜிடிபி) தொடர்​பாக சர்​வ​தேச செலா​வணி நிதி​யத்​தின் தரவு​களை அடிப்​படை​யாக வைத்து “வோர்ல்ட் ஆப் ஸ்டாஸ்​டிக்​ஸ்” என்ற அமைப்பு அண்​மை​யில் புள்​ளி​விவர பட்​டியலை வெளி​யிட்​டது. இந்த பட்​டியலை அமெரிக்க தொழில​திபர் எலான் மஸ்க் தனது சமூக வலைதள பக்​கத்​தில் பகிர்ந்​துள்​ளார்.

இதன்​படி 26.6 ஜிடிபி உடன் சீனா முதலிடத்​தில் உள்​ளது. 17 சதவீத ஜிடிபி​யுடன் இந்​தியா 2ம் இடத்​தில் இருக்​கிறது. 9.9 சதவீத ஜிடிபியுடன் அமெரிக்கா 3-வது இடத்​தில் உள்​ளது. இந்​தோ​னேசியா 3.8%, துருக்கி 2.2%, நைஜீரியா 1.5%, வியட்​நாம் 1.6 சதவீத ஜிடிபி​யுடன் அடுத்​தடுத்த இடங்​களில் உள்​ளன.

இது தொடர்​பாக எலான் மஸ்க் சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “அதி​கார பலம் இடம் மாறுகிறது” என்று தெரிவித்துள்ளார். பொருளா​தார பலத்​தில் அமெரிக்​காவை சீனாவும் இந்​தி​யா​வும் முந்​தி​யுள்ளன என்​பதை அவர் மறை​முக​மாக குறிப்​பிட்டு உள்​ளார். இந்த சூழலில் மத்​திய பட்​ஜெட் தொடர்பாக மாணவ, மாண​வியருடன் நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் நேற்று முன்​தினம் கலந்​துரை​யாடி​னார்.

அப்​போது அமெரிக்க தொழில​திபர் எலான் மஸ்​கின் சமூக வலைதள பதிவை அவர் சுட்​டிக் காட்டி பேசி​ய​தாவது: இந்தியாவின் பொருளா​தார பலம் என்ன என்​பதை எலான் மஸ்கின் பதிவு மிகத் தெளி​வாக எடுத்​துரைக்​கிறது. இந்​தி​யா​வின் வளர்ச்​சிக்கு இதுவே ஆதா​ரம். இதை எதிர்க்​கட்​சிகள் புரிந்து கொள்ள வேண்​டும். ஒட்டு மொத்த உள்​நாட்டு உற்​பத்​தி​யில் சீனாவுக்கு அடுத்து 2-வது இடத்​தில் இந்​தியா உள்​ளது.

26 சதவீத ஜிடிபி​யுடன் சீனா முதலிடத்​தில் இருக்​கிறது. இந்தியாவின் ஜிடிபி 17 சதவீத​மாக இருக்​கிறது. இரு நாடுகளுக்கும் இடையி​லான இடைவெளி சற்று அதி​க​மாகவே உள்ளது. எனினும் இந்த இடைவெளி நிச்​சய​மாக சமன் செய்யப்படும். இவ்​வாறு அவர் தெரிவித்​தார்​.

கிரண் ரிஜிஜு: மத்​திய அமைச்​சர் கிரண் ரிஜிஜு சமூக வலைதளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: வெளி​நாட்​டினரின் கருத்​துகளை நான் மேற்​கோள் காட்​டு​வது கிடை​யாது. ஆனால் மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்​திக்​காக அமெரிக்க தொழில​திபர் எலான் மஸ்க் வெளி​யிட்ட ஜிடிபி புள்​ளி ​விவரத்தை சுட்​டிக்காட்ட விரும்​பு​கிறேன்.

ஜனநாயக நாட்​டில் அரசை விமர்​சிக்க எதிர்க்​கட்​சிகளுக்கு உரிமை இருக்​கிறது. ஆனால் இந்​தி​யா​வின் புகழை கெடுக்​கும் வகை​யில் கருத்​துகளை வெளி​யிடு​வதை ஏற்க முடி​யாது. இந்தியராக இருப்​ப​தில் மிகுந்த பெரு​மிதம் கொள்​கிறேன். இவ்வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்​.

Spread the love