விளையாட்டு உலகில் தடகள வீராங்கனை பிரசவத்துக்கு பிந்தைய மீள்வருகை என்பது மிகப்பெரிய சவாலாகும். ஆனால், இந்தியத் வட்டு எறிதல் வீராங்கனையான சீமா காளிராம்னாவுக்கு, பிரசவத்துக்கு பிறகுதான் வாழ்வின் உண்மையான போராட்டமே தொடங்கியது.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள சீமாவின் இந்த வெற்றி, வெறும் விளையாட்டு சாதனை மட்டுமல்ல, நோயையும் தடைகளையும் உடைத்தெறிந்த ஒரு தாயின் அசைக்க முடியாத தன்னம்பிக்கை பயணம் ஆகும்.
தளராத மனம்
கடந்த 2022-ம் ஆண்டு தனது மகன் ருத்ராவைப் பெற்றெடுத்த சில வாரங்களிலேயே சீமாவுக்கு ‘ஆர்த்ரிடிஸ்’ எனப்படும் தீவிர மூட்டுவலி நோய் ஏற்பட்டது. வட்டு எறிதல் வீராங்கனை தனது முழு பலத்தையும் திரட்ட எந்த மூட்டுகளை நம்பியிருக்கிறாரோ, அதே மூட்டுகளை இந்த நோய் கடுமையாகத் தாக்கியது. இதனால் வீட்டில் அன்றாடப் பொருட்களைக் கூடத் தூக்க முடியாமல் கடுமையான வலியில் துடித்துள்ளார் 27 வயதான சீமா.
சீமாவின் கணவர் ரவீந்தர் காளிராம்னா, காயங்கள் காரணமாகத் தனது விளையாட்டு வாழ்க்கையைத் தொடர முடியாமல் போன முன்னாள் தேசிய சாம்பியன் ஆவார். வட்டு எறிதல் வட்டத்துக்குள் இருக்கும் எதிராளிகளை சந்திக்க முடியாத நிலையில், நோயை எதிர்த்துப் போராடும் தன் மனைவிக்கு பயிற்சியாளராகத் தன்னை மாற்றிக்கொண்டார் ரவீந்தர் காளிராம்னா.
ரவீந்தர் காளிராம்னா கூறும்போது, “இப்படி ஒரு நோய் இருக்கிறது என்பதே எனக்குத் தெரியாது. என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்தோம். இதை மருந்தால் முழுமையாகக் குணப்படுத்த முடியாது, கட்டுப்படுத்த மட்டுமே முடியும் என்பதால் ஆயுர்வேத முறைகளையும், உணவுப் பழக்கவழக்கங்களையும் மாற்றினோம். ஊறுகாய், எலுமிச்சை போன்ற புளிப்பு உணவுகளை தவிர்க்க வேண்டியிருந்தது. மெல்ல மெல்லவே சீமா பயிற்சிகளைத் தொடங்கினார்” என்றார்.
தாயாவதற்கு முன்பு சீமாவின் சிறந்த வட்டு எறிதல் வீச்சு 48.08 மீட்டராக இருந்தது. நோயைக் கட்டுப்படுத்தி 2024-ல் மீண்டும் களத்துக்கு திரும்பிய அவர், இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த இந்திய சாம்பியன்ஷிப்பில் 59.73 மீட்டர் தூரம் வீசி தனது வாழ்நாளின் சிறந்த சாதனையை பதிவு செய்தார். தற்போது கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டில் 58.65 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
கல்வியிலும் சாதனை
உடலை தேற்றி வந்த அதே வேளையில், பிவானியில் உள்ள சவுத்ரி பான்சி லால் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வியலில் முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சியிலும் சீமா ஈடுபட்டு வருகிறார். நேர்மறை எண்ணங்கள் மற்றும் மனக் காட்சிப்படுத்தல் என்பது விளையாட்டு வீரரின் செயல்திறனை எவ்வாறு உயர்த்தும் என்பது பற்றியதே இவரது ஆராய்ச்சியின் கருப்பொருளாகும். தான் எதிர்கொண்ட உடல்நலப் பிரச்சினைகளிலிருந்து மீண்டு வர இந்த மனக் காட்சிப்படுத்தல் உத்தியையே அவர் சொந்த வாழ்க்கையிலும் பயன்படுத்தியுள்ளார்.
அம்மா, பதக்கம் கொண்டு வா
இந்திய ராணுவத்தில் பணியாற்றிய முன்னாள் தடகள வீரரின் மகளான சீமா, நிலையான வேலை எதுவுமின்றி விளையாட்டு, கல்வி ஆராய்ச்சி, குழந்தைப் பராமரிப்பு என அனைத்தையும் ஒரே நேரத்தில் வெற்றிகரமாகக் கையாண்டு வருகிறார்.
காமன்வெல்த் விளையாட்டில் பங்கேற்பதற்காக ஸ்காட்லாந்துக்கு புறப்படுவதற்கு முன், அவரது சிறு வயது மகன் ருத்ரா வைத்த ஒரே கோரிக்கை, “அம்மா, எனக்கு விளையாட ஒரு பதக்கம் கொண்டு வாருங்கள்” என்பதுதான். மகனின் ஆசையை நிறைவேற்றி, தன் கைகளில் பதக்கத்தோடு தாயகம் திரும்புகிறார் இந்த இரும்பு பெண்மணி.

More Stories
பாரா தடகளத்தில் தங்கம் வென்றார் இந்திய வீரர் திலீப் மஹது காவிட்
ஆப்பிரிக்க ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த குல்வீர்
குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 9 பதக்கம் உறுதி | CWG 2026