சென்னை: நாளை, நாளை மறுநாள் மற்றும் 6 ஆகிய தேதிகளில் முதியோர், மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு சென்று பொது விநியோகத்திட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. இதுகுறித்து, சென்னை மண்டலம் கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர் சா.பாபு வெளியிட்ட செய்திக் குறிப்பு: வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இல்லம் சென்று பொது விநியோக திட்டப் பொருட்களை விநியோகிக்கும் திட்டத்தின் கீழ், 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் இல்லங்களுக்குச் சென்று பொது விநியோகத் திட்டப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்தின் 4, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் சென்னையில் ஆவடி, அம்பத்தூர், அண்ணாநகர், சிதம்பரனார், கொளத்தூர், பெரம்பூர், ஆர்.கே.நகர், ராயபுரம், திருவொற்றியூர், வில்லிவாக்கம், ஆயிரம்விளக்கு, சேப்பாக்கம், மயிலாப்பூர், சைதாப்பேட்டை, தி.நகர், சோழிங்கநல்லூர், பரங்கிமலை, தாம்பரம் மற்றும் மதுரவாயல் ஆகிய 19 மண்டலங்களில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்பட்டுவரும் 1346 நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்கள் அத்தியாவசியப் பொருட்களை இல்லம் சென்று விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே, இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் இத்திட்டத்தை தவறாமல் பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More Stories
வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் ஆக.9 வரை மழை வாய்ப்பு
திருப்பரங்குன்றம் விவகாரம்: உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
ஆடியில் பெருகாத காவிரி: ஆற்றுக்குள் ஊற்று பறித்து திருச்சி பெண்கள் வழிபாடு